Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பின்வருவனவற்றிற்கு விரிவாக பதிலளிக்கவும்

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு - பின்வருவனவற்றிற்கு விரிவாக பதிலளிக்கவும் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath

   Posted On :  24.07.2022 06:10 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

பின்வருவனவற்றிற்கு விரிவாக பதிலளிக்கவும்

VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள். VIII. வரைபடப் பணி. - சமூக அறிவியல் : வரலாறு : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.

ஐரோப்பிய நாடுகளின் அணிச் சேர்க்கைகளும் எதிர் அணிச் சேர்க்கைகளும்:

1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.

• ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி ஆஸ்திரிய - ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

• இரண்டாவது முகாம் நேசநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்:

• தேசப்பற்றின் வளர்ச்சியோடுஎனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன் என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.

• இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறி கொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக மாறியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனைப்பாங்கு:

• ஜெர்மன் பேரரசர் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.

• ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது.

• இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:

• பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர். 1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது.

• ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு :

1908 ஆம் ஆண்டில் துருக்கியில் ஒரு வலுவான நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும், ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.

• ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும் போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.

பால்கன் போர்கள்:

• பால்கன் நாடுகள் 1912இல் துருக்கியைத் தாக்கி தோற்க்கடித்தது.

1913 இல் இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.

• மாசிடோனியாவை பிரித்துக் கொள்வதில் பல்கேரியா, செர்பியாவையும், கிரீஸ்சையும் தாக்கியது.

• இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கப்பட்டு புகாரேஸ்ட் உடன்படிக்கை உடன் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்:

1914 ஜூன் 28 ஆம் நாள் ஆஸ்திரிய பேரரசின் இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு செர்பியனால் படுகொலை செய்யப்பட்டார்.

• ஆஸ்திரியா இதனை செர்பியாவை கைப்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதியது.

• செர்பியாவிற்கு ஆதரவாக ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்ற வதந்தியால் ஜெர்மனி ரஷ்யா மீது போர் தொடுத்தது.

 

2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.

• போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போரால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்க வேண்டும்.

• ஜெர்மன் படை 1,00,000 வீர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய கப்பற்படை ஒன்றையும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

• ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்பட்டது.

• ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.

• அல்சேஸ் - லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.

• பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா லிதுவேனியா ஆகியன சுதந்திர நாடுகளாகச் செயல்படும்.

• போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.

• ரைன்லாந்து நேச நாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும்.

 

3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக

• முதல் உலகப்போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட தோல்வி ரஷ்ய பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது.

• இதனால் கோபமுற்ற ரஷ்ய மக்கள் மன்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1917 மார்ச் திங்கள் 15 ஆம் நாள் சார் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகினார்.

தற்காலிக அரசு:

• அரசு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இரண்டு அமைப்புகள் இருந்தன.

• ஒன்று பழைய டூமா சோவியத்.

• சோவியத் அமைப்பின் ஒப்புதலோடு டூமாவால் ஓர் தற்காலிக அரசு நிறுவ முடிந்தது.

தற்காலிக அரசின் தோல்வி

• புரட்சி வெடித்த போது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்

"அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கேஎன்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் வென்றெடுத்தது.

• போரினால் ஏற்பட்ட பெரும் துயரத்தால் மக்கள்ரொட்டி, அமைதி, நிலம்என்னும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.

• தற்காலிக அரசு எடுத்த தவறான முடிவுகளால் போல்ஷ்விக்குகள் தலைமையில் நடைபெற்ற எழுச்சி மேலும் வலுபெற்றது.

• அரசுபிரவ்தாவை தடை செய்து போல்ஷ்விக்குகளைக் கைது செய்தது. டிராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார்.

லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றல் :

• அக்டோபர் திங்களில் உடனடிப் புரட்சிக் குறித்து முடிவு செய்ய லெனின் கேட்டுக் கொண்டார். டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார்.

• நவம்பர் திங்கள் 7ஆம் நாள் முக்கியமான அரசுக் கட்டிடங்கள் குளிர்கால அரண்மனை, பிரதம மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை உட்பட அனைத்தும் ஆயுதம் ஏந்திய ஆலைத் தொழிலாளர்களாலும் புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன. 1917 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாள் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி என புதுப் பெயரிடப் பெற்றது.

 

4. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:

• பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. சர்வதேச சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது என தீர்ப்பளித்தது.

• போலந்திற்கும் ஜெர்மனியக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்ட போது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.

• எல்லைப் பிரச்சனையின் காரணமாக கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்திரவிட்டது.

• விசாரணைக்குப்பின் சங்கம் கிரீஸின் மீது குற்றம்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீர்மானித்தது.

1925 ஆம் ஆண்டு லொக்கார்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை சர்வதேச சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.

• லொக்கார்னோ உடன்படிக்கையின் படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.

• ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.

 

VII. செயல்பாடுகள்.


1. முதல் உலகப்போரில் ஈடுபட்ட நாடுகளின் தலைநகரங்களையும் போர்க்களங்களையும் வரைபடத்தில் குறிப்பதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.

பார்க்க: வரைபடப் பயிற்சி புத்தகம் - பக்கம் எண்: 68

 

VIII. வரைபடப் பணி.


உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.

1. கிரேட் பிரிட்டன்,

2. ஜெர்மனி,

3. பிரான்ஸ்,

4. இத்தாலி,

5. மொராக்கோ ,

6. துருக்கி,

7. செர்பியா,

8. பாஸ்னியா,

9. கிரீஸ்,

10. ஆஸ்திரிய-ஹங்கேரி,

11. பல்கேரியா,

12. ருமேனியா



 


 

Tags : Outbreak of World War I and Its Aftermath | History முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு.
10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Answer the following in detail Outbreak of World War I and Its Aftermath | History in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : பின்வருவனவற்றிற்கு விரிவாக பதிலளிக்கவும் - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்