Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : வினா விடை | 12th Zoology : Chapter 12 : Biodiversity and its conservation

   Posted On :  14.04.2022 01:04 am

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 12 : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு

உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : வினா விடை

விலங்கியல் :உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு: புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறுகிய, விரிவான வினா விடை

மதிப்பீடு


புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு 


1. பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது? 

அ) குளிர் பாலைவனம்

ஆ) வெப்ப மண்டல காடுகள் 

இ) மிதவெப்ப மழைக்காடுகள்

ஈ) சதுப்பு நிலங்கள்

விடை: ஆ) வெப்ப மண்டல காடுகள் 


2. இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது 

அ) சூழல் உள் பாதுகாப்பு

ஆ) சூழல்வெளி பாதுகாப்பு 

இ) உடலுள் பாதுகாப்பு

ஈ) உடல்வெளி பாதுகாப்பு

விடை: அ) சூழல் உள் பாதுகாப்பு 


3. பின்வருவனவற்றில் எது சூழல்உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல 

அ) புகலிடங்கள்

ஆ) தேசிய பூங்காக்கள் 

இ) விலங்கியல் பூங்காக்கள்

ஈ) உயிர்கோள காப்பிடம்

விடை: இ) விலங்கியல் பூங்காக்கள் 


4. பின்வருவனற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது? 

அ) மேற்கு தொடர்ச்சி மலை

ஆ) இந்திய கங்கை சமவெளி 

இ) கிழக்கு இமயமலை தொடர்

ஈ) அ மற்றும் இ 

விடை: ஈ) அ மற்றும் இ 


5. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் 

அ) WWF 

ஆ) IUCN 

இ) ZSI

FT.) UNEP

விடை: ஆ) IUCN 


6. உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்? 

அ) எட்வேர்டு வில்சன் 

ஆ) வால்டர் ரோசன் 

இ) நார்மன் மியர்ஸ் 

ஈ) ஆலிஸ் நார்மன்

விடை: ஆ) வால்டர் ரோசன் 


7. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது. 

அ) இலையுதிர் காடுகள்

ஆ) வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள் 

இ) ஊசியிலைக் காடுகள்

ஈ) அமேசான் காடுகள்

விடை:ஈ) அமேசான் காடுகள் 


8. வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது? 

அ) பாலூட்டிகள் 

ஆ) பறவைகள்

இ) இருவாழ்விகள் 

ஈ) முட்தோலிகள்

விடை: இ) இருவாழ்விகள் 


9. கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதகமாக உள்ளன. 

காரணம் : பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

அ) காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது. 

ஆ) காரணம் மற்றும் கூற்று சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை 

இ) கூற்று சரி, காரணம் தவறு 

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை: அ) காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது. 



10. ஓரிடத் தன்மை (Endemism) - வரையறு.

ஓரிடத் தன்மை என்பது ஒரு தாவரமோ அல்லது ஒரு விலங்கோ குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட தீவிலோ காணப்படக்கூடிய தன்மை உடையது.

எ.கா. காட்டு கழுதை, இந்தியப் பாலைவனத்தில் மட்டும் காணப்படும் விலங்காகும். 



11. இந்தியாவில் உள்ள மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் எத்தனை? அவற்றைப் பெயரிடு. 

* இந்தியாவில் நான்கு மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் உள்ளன. அவையாவன. 

* இமய மலை (முழு இந்திய இமய மலைத் தொடர் மண்டலம்) 

* மேற்கு தொடர்ச்சி மலைகள் >இந்தோ - பர்மா, அசாம் மற்றும் அந்தமான் தொகுதி தீவுகள்.

* சுந்தா லேன்ட் (சுந்தா லேன்ட் - குமரிக்கண்டம்) 



12. உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை?

* மரபியல் பல்வகைத் தன்மை  

* சிற்றின பல்வகைத் தன்மை

* சமூக/ சூழ்நிலை மண்டல பல்வகைத் தன்மை 



13. ராவோல்ஃபியா வாமிடோரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது? 

ராவோல்ஃபியா வாமிடோரியா எனும் மூலிகைத் தாவரத்தில் ரிசர்பைன் என்ற செயல்படு வேதிப்பொருள் உள்ளது. இது மரபியல் பல்வகைத் தன்மையை சார்ந்துள்ளது. 



14. “அமேசான் காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது” - இந்த சொற்றொடரை நியாயப்படுத்து. 

* பூமியின் நிலப்பரப்பில் 14% கொண்டிருந்த வெப்ப மண்டல காடுகளின் பரப்பு தற்போது 6% கூட இல்லை 

* புவிக் கோளின் நுரையீரல் என அழைக்கப்பட்ட பரந்து விரிந்த அமேசான் மழைக் காடுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களின் அடைக்கலமாக திகழ்ந்தது. 

* இங்குள்ள மழைக்காடுகளின் அதிக மரங்கள் இருந்ததால் ஒளிச்சேர்க்கையின் போது அதிக அளவிலான ஆக்ஸிஜனை வெளிவிடுவதால் அமேசான் பூமிகோளின் நுரையீரலாகக் கருதப்பட்டது. 



15. செந்தரவுப் புத்தகம் - இதை பற்றி உனக்கு தெரிவது என்ன? 

* செந்தரவுப் புத்தகம் என்பது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆகும். 

* உலக பாதுகாப்பு கூட்டமைப்பு செந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது. 

நோக்கங்கள்: 

* உயிரின பல்வகைத் தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அளவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். 

* மரபற்றுப் போகும் நிலையில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துதல். 

* குறைந்து வரும் உயிரின பல்வகைத் தன்மைக்கு உலகளாவிய குறியீட்டெண்ணை வழங்குதல்.

* பாதுகாப்பு தேவைப்படும் உயிரினங்களின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்தல் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் உதவுதல். 

* பல்வகைத் தன்மை பாதுகாப்பு தொடர்புடைய பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் பற்றிய தகவல்கள் அளித்தல். 

* சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் 8 வகையாக வகைப்படுத்தப்பட்டள்ளன. 

1. மரபற்றுப் போனவை

2. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை 

3. எளிதில் பாதிக்கப்படக் கூடியவை

4. முழுமையான தகவல் இல்லாதவை 

5. வனத்தில் மரபற்றுப் போனவை 

6. அழியும் நிலையில் உள்ளவை 

7. குறைந்த ஆபத்துடையவை 

8. மதிப்பீடு செய்யப்படாதவை. 



16. மூலச்சிற்றனங்கள் மரபற்று போவது உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கு வழிவகுத்தது நியாயப்படுத்துக.

* உலகின் எந்தப் பகுதியிலும் ஒரு இனத்தின் ஒரு உறுப்பினர் கூட உயிருடன் இல்லை என்ற நிலையை அடைந்த இனம் மரபற்றுப் போனதாகக் கருதப்படுகிறது. 

* கடந்த 450 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஐந்து பேரழிவுகள் நிகழ்ந்து அதன் விளைவாக உலகில் ஏறத்தாழ 50% தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்துள்ளன. 

* உயிரினங்களின் அழிவிற்கு மிக கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் இனத்தொகை பண்புகளும் காரணமாகும். 

இயற்கை வழி மரபற்று போதல்: 

* சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கொன்றுண்ணிகள், நோய்கள் போன்ற காரணங்களால் ஒரு சிற்றினம் மேம்பட்ட தகவமைப்புகளைக் கொண்ட மற்றொரு சிற்றினத்தால் மாற்றம் செய்யப்படுகிறது. 

* அகக்கலப்பின் வீரியக் குறைவு காரணமாக சிறு இனக்கூட்டங்கள் பெரிய இனக் கூட்டங்களை விட விரைவில் மரபற்று போகின்றன. 

பெருந்திரள் மரபற்று போதல்: 

* 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகு நாணற்ற உயிரினங்கள் மரபற்று போயின. 

மானுட செயல்களால் மரபற்றுப் போதல்: 

* வேட்டையாடுதல், வாழிடச் சீரழிவு, மிகை பயன்பாடு, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகள் அழிவைத் தூண்டுகின்றன. 

* வாழிட இழப்பு காரணமாக பல இருவாழ்விகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அறியப்படுகிறது. 



17. சூழல் உள்பாதுகாப்பு மற்றும் சூழல் வெளிபாதுகாப்பு இரண்டையும் ஒப்பிட்டு வேறுபடுத்துக. 

சூழல் உள்பாதுகாப்பு

1. தாவர அல்லது விலங்கினங்களை அவற்றிக்குரிய தளங்களிலேயே பாதுகாக்கப்படுதல் அல்லது தாவர விலங்கின மரபணு வளங்களை இயற்கை சூழலில் பாதுகாத்தல்.

2. அழியும் நிலையில் உள்ள தாவர அல்லது விலங்கினங்களை அவற்றின் இயற்கை வாழிடங்களில் பாதுகாத்தல். இம்முறையில் இயற்கை வாழிடங்களையே மீட்பது அல்லது கொன்றுண்ணி பாதுகாத்தல், விலங்குகளிடமிருந்து சிற்றினங்களை பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.

3. தேசிய பூங்காக்கள், உயிர்கோள் காப்பிடங்கள், வனவிலங்கு புகலிடங்கள் ஆகியவை சூழல் உள்பாதுகாப்பு யுக்திகளாகும்.


சூழல் வெளிபாதுகாப்பு

1. அழியும் நிலையிலுள்ள விலங்கு அல்லது தாவர இனங்களை தனிப்பட்ட இடங்களில் வைத்து சிறப்பாக பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முறையாகும். 

2. இனத்தொகையை மீட்டெடுக்க உதவுதல் அல்லது இயற்கையான வாழிடங்களை நெருக்கமாக ஒத்திருக்கும் அமைப்புகளைக் கொண்டு மரபற்றுப் போவதிலிருந்து பாதுகாத்தல்.  

3. விலங்கியல் பூங்காக்கள், தாவரவியல் தோட்டங்கள் ஆகியவை பொதுவான சூழல் வெளிபாதுகாப்புக்கான திட்டங்களாகும்.



18. அழியும் நிலை சிற்றினங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

* அழியும் நிலை சிற்றினங்கள் என்பது மரபற்றுப் போக அதிக வாய்ப்புகள் உள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள் ஆகும். 

* சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சிறப்புப் பட்டியலில் தீவிரமாக அழியும் நிலையிலுள்ள உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அழியும் நிலையிலுள்ள வன விலங்குகளுக்கு இரண்டாம் நிலை அதிகபட்ச பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. 

* 1998 ஆம் ஆண்டில் 1102 விலங்கினங்களும் மற்றும் 1197 தாவர இனங்களும் ICUN சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 

* 2012 ஆம் ஆண்டில் 3079 விலங்கினங்களும், 2655 தாவர இனங்களும் உலகெங்கும் அழிந்து வரும் இனங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. 

* எ.கா. மலை கொரில்லா, பாண்டா, மோனார்க் வண்ணத்துப்பூச்சி. 



19. நம் வெப்ப மண்டலங்களிலிருந்து துருவங்கள் நோக்கி நகரும் பொழுது உயிரிய பல்வகைத் தன்மையின் பரவல் குறைகிறது ஏன்?

* வெப்பநிலை, மழைப்பொழிவு, நிலநடுக்கோட்டிலிருந்து தூரம், கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் ஆகியவை பல்வகைத் தன்மை பரவலின் பாங்கினை நிர்ணயிக்கும் சில காரணிகளாகும். 

* துருவங்களில் இருந்து பூமத்திய ரேகை வரை பல்வகைத் தன்மை அதிகரிக்கின்றது. 

* துருவப் பகுதியிலிருந்து மிதவெப்ப மண்டலத்தை நோக்கி நகரும்பொழுது பலவகைத் தன்மை அதிகரித்து வெப்ப மண்டல பகுதிகளில் உச்சத்தை அடைகின்றது. 

* ஆகவே துருவ மற்றும் மிதவெப்ப மண்டலங்களை விட வெப்ப மண்டல பகுதிகள் பல்வகைத்தன்மையின் புகலிடமாக திகழ்கின்றன. 

* மிதவெப்ப மண்டலங்களில் குளிர் காலத்தில் கடுமையான கால நிலையும், அதே நேரத்தில் துருவப் பகுதியில் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் மிகக் கடுமையான காலநிலையும் நிலவுகின்றது. 

* தன் நிலப்பரப்பில் பெரும் பகுதியை வெப்ப மண்டலத்தில் கொண்ட இந்தியாவில் 1200க்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன. 

* உயரமான மலைப்பகுதிகளில் மேலே செல்லசெல்ல வெப்பநிலை குறைவின் காரணமாக உயிரினங்களின் பல்வகைத் தன்மை குறைகின்றது.  

வெப்ப மண்டல பகுதிகளில் உயிரிய பல்வகைத் தன்மையின் செழுமையான காரணங்கள்: 

* நிலநடுக்கோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் 

* உயிரினங்கள் வாழ இணக்கமான வாழிடங்கள் உள்ளன.

* வெப்ப மண்டலங்களில் உள்ள சூழ்நிலைக் கூறுகள் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக உள்ளன. 

* 27°C முதல் 35°C வரை வெப்ப நிலை நிலவுகிறது. இந்த வெப்பநிலை உயிரினங்களின் வளர்சிதை மாற்றங்கள் எளிதாகவும் மற்றும் அதிதிறனுடனும் செயல்பட உதவுகிறது.

* ஆண்டுக்கு 200 கி.மீ.க்கும் அதிகமான மழை பொழிகிறது. 

* காலநிலை, பருவங்கள், வெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாக இருப்பதால் உயிரினங்களில் வேற்றுமைத் தன்மையையும், எண்ணிக்கையையும் உயர்த்த உதவுகின்றன.

* ஊட்டசத்து மற்றும் அதிக வளங்கள் கிடைக்கின்றன. 



20. வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை? 

* மனித சமுதாயத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று.

* குடியிருப்புகள், விவசாயம், சுரங்கம்அமைத்தல், தொழிற்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களுக்காக உயிரினங்களின் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. 

* இதன் விளைவாக உயிரினங்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள அல்லது வேறு இடங்களுக்கு நகர கட்டாயமாக்கப் படுகின்றன. 

* அதிக மக்கள் தொகை நெருக்கம், நகர மயமாக்கம், தொழில்மயமாக்கம் மற்றும் வேளாண்மை முன்னேற்றத்திற்கான நிலங்களின் தேவை, நீர் மற்றும் மூலப்பொருட்களின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கின்றது. 

* இதனால் சதுப்பு நிலங்களை நிரப்புதல், புல்வெளிகளை விளை நிலமாக்குதல், மரங்களை வெட்டுதல், ஆறுகளில் மணல் அள்ளுதல், மலைகளை குடைந்து சாலைகள் அமைத்தல் போன்ற பல செயல்கள் மூலம் இது சாத்தியமாகிறது.

* வெப்ப மண்டல மழைக்காடுகள் இத்தகைய வாழிட அழிவிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும். 

* புவிக்கோளின் நுரையீரல் என அழைக்கப்பட்ட அமேசான் மழைக்காடுகளின் பல பகுதிகள் வேளாண்மை மற்றும் மனித குடியிருப்புகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. 

* நியூசிலாந்தின் 90% சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு சோயாபீன்ஸ் பயிரிடவும், இறைச்சி தரும் கால்நடைகளுக்கு புல் வளர்ப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளன. 

* தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைகள் மனித ஆக்கிரமிப்புகளால் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. 

* இதன் விளைவாக தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. மற்றும் விலங்குகள் தம் வாழிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. 



21. மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் பொதுவாக எங்கு காணப்படுகிறது? ஏன்? 

* அபாய நிலை மிகை உள்ளூர் உயிரினப்பகுதி என்பது குறைந்தது 1500 குழல் கற்றைக் கொண்ட தாவர இனங்களில் 70%க்கும் அதிகமான மூல தாவர இனங்களை இழந்த பகுதியாகும். 

* உலகில் 35 உயிரியப் பல்வகைத் தன்மை அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதிக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

* அதில் 4 இந்தியாவில் உள்ளது. அவை. 

* இமய மலை (முழு இந்திய இமய மலைத் தொடர் மண்டலம்) 

* மேற்கு தொடர்ச்சி மலைகள் 

* இந்தோ - பர்மா, அசாம் மற்றும் அந்தமான் தொகுதி தீவுகள். 

* சுந்தா லேன்ட் - குமரிக்கண்டம் நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது.



22. உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?

நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்திருப்பதற்கும், உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும். 

உயிரிய பல்வகைத் தன்மையின் முக்கியத்துவம். 

இதை கீழ்க்கண்ட கோணத்தில் நோக்கி அதனை அளவீடு செய்யலாம். 

1. சூழ்நிலை மண்டல சேவைகள் 

2. உயிரிய வளங்கள் 

3. உயிரிய பல்வகைத் தன்மையின் சமூகப்பயன்கள். 

முக்கிய செயல்பாடுகள்: 

* ஊட்டச்சத்து சுழற்சி அல்லது உயிரிய புவி (N2, C, H2O, P, S) சுழற்சிகளின் தொடர்ச்சி. 

* மண் நுண்ணுயிரிகள் வெவ்வேறு ஊட்ட நிலை உறுப்பினர்களோடு சேர்ந்து மண் உருவாக்கம், சீரமைப்பு அல்லது மண் வள பராமரிப்பு ஆகியவை நடைபெறுதல். 

* சூழ்நிலை மண்டலத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் உணவு வளங்களை வழங்குதல்.

* நீர் பிடிப்பு பகுதிகளாக, வடிகட்டிகளாக, நீரோட்ட நெறி படுத்திகளாக மற்றும் நீர் சுத்திகரிப்பாளர்களாக செயல்படுதல். 

* தட்ப வெப்ப நிலையின் நிலைத்தன்மை, மழைப்பொழிவு, வெப்பநிலை நெறிப்படுத்துதல், Co2, உறிஞ்சப்படுதல் ஆகியவற்றிற்கு காடுகள் அவசியம். பதிலாக காடுகள் அங்குள்ள தாவரங்களின் வகைகளாகவும், அடர்த்தியையும் ஒழுங்குபடுத்துகின்றது. 

* காட்டு வனங்களின் மேலாண்மை மற்றும் நிலையான வளர்ச்சி. 

* உயிரியல் கூறுகளிடையே சமநிலையை பராமரித்தல். 

* மனிதர்கள் உற்பத்தி செய்கின்ற குப்பைகள், கழிவு நீர், சாக்கடை மற்றும் வேளாண் கழிவுகள் ஆகியவற்றை சிதைப்பதில் நுண்ணுயிரிகள் மிகப்பெரிய பங்காற்றுக்கின்றன. 

* உணவு வளங்கள், மரபியல் வளங்கள், மருந்து வளங்கள் மற்றும் எதிர்கால உயிரிய வளங்கள் போன்றவற்றிற்கான சேமிப்பு இடமாக உயிரிய பல்வகைத் தன்மை மண்டலங்கள் உள்ளன. 

* தனித்துவமான அழகு உணர்வு, சுற்றுச்சூழல் சார்ந்த சிறப்பு சுற்றுலா தலங்களைத் தருகிறது. சுற்றுலாவிற்கென வணிக முக்கியத்துவமும் உண்டு. 



23. ஏன் விலங்கின பல்வகைத்தன்மை தாவர பல்வகைத் தன்மையை விட அதிகமாக காணப்படுகிறது.

* தாவரங்களைப் போன்று இல்லாமல் விலங்குகள் ஒரு இடத்திலிருந்து வேறிடம் செல்லும் திறன் படைத்தவை. 

* இதனால் விலங்குகள் பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்ட வெவ்வேறு சூழ்நிலை மண்டலங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்கின்றன. 

* இதன் காரணமாகவே விலங்கின பல்வகைத் தன்மை தாவர பல்வகைத் தன்மையை விட அதிகமாக காணப்படுகிறது. 



24. அயல் சிற்றினங்களின் படையெடுப்பு ஓரிட சிற்றினங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றது. - வாக்கியத்தை நிரூபி.

* அந்நிய இனங்கள் பெரும்பாலும் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ வர்த்தக நோக்கங்களுக்காகவோ உயிரி வழி கட்டுபாட்டு முகவர்களாகவோ அறிமுகப்படுத்தப்படுகின்றன. 

* இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்புத் தன்மையுடன் இருப்பதால் அவை உள்ளூர் இனங்களை வெளியேற்றி விடுவதால் உயிரினங்களின் அழிவிற்கு இரண்டாவது முக்கிய காரணியாக அந்நிய இனங்கள் கருதப்படுகிறது.

* 1952 இல் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட அதிக உற்பத்தித் திறனுடைய திலேப்பியா (ஒரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ்) கேரளாவின் இனங்களான பன்கிஸ் டூபியஸ் மற்றும் லேபியோ கோண்டியஸ் விரைவில் அழியும் நிலையில் உள்ளன. 

* கொல்கத்தாவின் சதுப்பு நிலப்பகுதியில் உள்ள உள்ளூர் மீன்களின் இனத் தொகையை அமேசான் துடுப்பு பூனை மீன்கள் குறைக்கின்றது. 

* நைல்பெர்ச் என்ற கொன்றுண்ணி மீனை தெற்கு ஆப்பிரிக்காவில் விக்டோரியா ஏரியில் அறிமுகப்படுத்தியதன் விளைவாக இயற்கையான 200க்கும் மேற்பட்ட சிச்லிட் மீன் இனம் அழிந்தது. 

* ஆப்பிரிக்க ஆப்பிள் நத்தை தற்போது நாடெங்கிலும் பரவி பல உள்நாட்டு உயிரினங்களின் வாழிடங்களை அச்சுறுத்துகிறது. 

* மேலும் இவை பயிர்களை தாக்கும் தீங்குயிரிகளாக மாறி வருகின்றன.

* வெளியூர் மண்புழு இனங்கள் உணவுக்காக உள்ளூர் இனங்களோடு போட்டியிட்டு அவற்றின் எண்ணிக்கையை குறைக்கின்றன. 

* மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை வாழிடமாகக் கொண்ட பப்பாளி மாவுப் பூச்சியான பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் நம் நாட்டு பப்பாளி பயிர்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. 



25. மனித செயல்பாடுகளால் உயிரியப் பல்வகைத்தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் யாவை? விளக்கு. 

* இயற்கையால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர நேரடியாகவும், மறைமுகமாகவும், வாழிடம் மற்றும் உயிரியப் பல்வகைத் தன்மை ஆகியவற்றின் இழப்பிற்கு மனித செயல்பாடுகளே காரணம். 

* வேளாண்மை செயல்பாடுகளால் நிலப்பரப்பு துண்டாடப்படுதல் மற்றும் அழிக்கப்படுதல், பிரித்தெடுத்தல் (சுரங்கம், மீன்பிடித்தல், தேங்கிடங்கள், அறுவடை) மற்றும் வளர்ச்சி (குடியிருப்புகள், தொழிற்சாலைகள்) ஆகியவை வாழிட இழப்பு மற்றும் துண்டாடப்படுதலுக்கு காரணமாகின்றன. 

* இதன் விளைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சிறிய மற்றும் ஆங்காங்கே உருவான உயிரின கூட்டங்கள் உருவாக வழி ஏற்படுகிறது. 

* அவ்வாறு உருவான சிறு கூட்டம் அழியும் நிலை இனங்களாக மாறுகின்றன. 

* சிறப்பு வகையான உணவுப் பழக்கம், சிறப்பு வகை வாழிடத் தேவை, பெரிய உடல், சிறிய இனக் கூட்டம், குறைவான புவியியல் பரவல் மற்றும் பொருளாதார அல்லது வணிக உயர் மதிப்பு ஆகியவை உயிரியப் பல்வகைத் தன்மைக்கான வேறு சில அச்சுறுத்தல்கள் ஆகும். 



26. பெருந்திரள் மரபற்று போதல் என்றால் என்ன? எதிர்காலத்தில் இது போன்ற ஒரு அழிவை எதிர்கொள்வீரா? அதைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கையின் படிநிலைகளைவரிசைப்படுத்துக.  

* சுற்றுச்சூழல் பேரழிவுகளால் பூமி சில பெருந்திரள் அழிவுகளை சந்தித்துள்ளது.

* 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகுநாணற்ற உயிரினங்கள் மரபற்றுப் போயின.  

* சுற்றுச்சூழல் பேரழிவுகளை கட்டுப்படுத்தாவிடில் எதிர்கால சந்ததியினர் இதுபோன்ற பேரழிவுகளைச் சந்திக்க நேரிடும். 

எடுக்க வேண்டிய நடவடிக்கையின் படி நிலைகள்:

* இயற்கைக்கு வழி விடுதல் 

* இயற்கைக்கு எதிரான மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்

* மாசு இல்லாத ஒரு சுற்றுச்சூழலை உருவாக்குதல். 

* அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை அதனதன் வாழ்விடங்களில் பாதுகாத்தல்.



27. வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும் - நிருபி. 

இடம் மாறும் வேளாண்மை : 

* இயற்கையான மரங்களை கொண்ட வனங்களை எரித்து சுத்தம் செய்து 2 - 3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்தபின் மண் வளம் குறைகிறது. 

* இனி பயிர் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை வரவும், வேறு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி எரித்து நிலத்தை தயார்படுத்துவர். இதுவே இடம் மாறும் வேளாண்மை எனப்படும். 

* இது வடக்கிழக்கு இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

* இவ்வாறு பெரிய வனப்பரப்பு எரிக்கப்படுவதால் வனத்தின் பரப்பளவு குறைந்து மாசு ஏற்படுவதுடன் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவும் அதிகரித்தது.

* வாழிட அழிப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றுக்கு வழி வகுக்கின்றது. 

* இது விலங்கினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.  



28. உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிடுக. 

உயிரியப் பல்வகைத் தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள்: 

* வாழிட இழப்பு, காடுகள் துண்டாடப்படுதல் மற்றும் அழித்தல்.

* சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் மாசுபடுத்திகள் (புகைபனி, தீங்குயிர்க் கொல்லிகள், களைக் கொல்லிகள், எண்ணெய் கசிவுகள், பசுமை இல்ல வாயுக்கள்) 

* தட்பவெப்பநிலை மாற்றம் 

* வெளிநாட்டு சிற்றினங்களை அறிமுகப்படுத்துதல் 

* வளங்கள் அதிகமாக சுரண்டப்படுதல் (ஆக்கிரமிப்பு, மரங்களை வரையறையின்றி வெட்டுதல், மிகை மீன்பிடிப்பு, வேட்டையாடல், சுரங்கங்கள்) 

* தீவிர வேளாண்மை, நீருயிரி வளர்ப்பு நடைமுறைகள். 

* உள்ளூர் இனங்களுடன் வெளி இனங்களை இணைத்து கலப்பினம் உருவாக்குவதால் உள்ளூர் இனங்கள் அழிதல். 

* இயற்கை பேரழிவுகள் (ஆழிப்பேரலை, காட்டுத்தீ, நிலநடுக்கம், எரிமலை) 

* தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம், உட்கட்டமைப்பு வளர்ச்சி, சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து பணிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள், அணை கட்டுதல், கட்டுப்பாடற்ற சுற்றுலா, ஒற்றை பயிர் சாகுபடி ஆகியவை பொதுவான அச்சுறுத்தல்களாகும். 

* இணை மரபற்றுப் போதல். 



29. உயிரியப் பல்வகைத்தன்மையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்? 

உயிரியப் பல்வகைத் தன்மையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நம் பங்களிப்பு. 

பாதுகாப்பின் பொதுவான உத்திகள். 

* அபாயத்திலுள்ள அனைத்து சிற்றினங்களையும் அடையாளம் கண்டு பாதுகாத்தல்.

* பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயிரிகளையும் அவற்றோடு தொடர்புடைய வனவிலங்குகளையும் அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாத்தல். 

* உணவு, இனப்பெருக்கம், பேணி வளர்த்தல், ஓய்விடம் ஆகியவற்றுக்கான வாழ்விடங்களில் மிக ஆபத்தான நிலையில் இருப்பவைகளை அடையாளம் கண்டு பாதுகாத்தல். 

* உயிரினங்களின் உறைவிடம், உணவு மற்றும் இனப்பெருக்க பகுதிகளை கண்டறிந்து பாதுகாத்தல். 

* 'நிலம், நீர் மற்றும் காற்று முதலியவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாத்தல்.

* வன உயிரிகளின் பாதுகாப்புச் சட்டம் அமல் படுத்துதல்.



30. ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது நியாயப்படுத்துக. 

* உயிரிய பல்வகைத் தன்மை என்பது இந்த பூமியில் வாழும் பலவகையான உயிரினங்களைக் குறிக்கிறது.

* மழைக் காடுகள், பவளப்பாறைகள், புல்வெளிகள், பாலைவனங்கள், பனிச்சமவெளிகள் மற்றும் துருவ பகுதியின் பனிப்பாறைகள் போன்ற வெவ்வேறு சூழ்நிலை மண்டலங்களில் உயிர்கள் வாழ்கின்றன. 

* நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்து இருப்பதற்கும் இவ்வாறான உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும். 

* மேலும் உயிரிய பல்வகைத் தன்மை சுற்றுச்சூழல் செயல்முறைகளை பராமரிக்கவும், மண் உற்பத்தி, ஊட்டச்சத்துகளின் மறுசுழற்சி, தட்பவெப்பநிலை பாதிப்பு, கழிவுகளை சிதைத்தல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.  

* சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தின் தன்மையை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது.

* மனித இனம் உயிர் வாழ்தல் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பூமிக் கோளத்தின் அனைத்து உயிரிகளின் நலமான உயிர் வாழ்தலைச் சார்ந்துள்ளது. 



31. சிறுகுறிப்பு வரைக. i) பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ii) வனவிலங்கு புகலிடங்கள் iii) WWF 

பாதுகாக்கப்பட்ட பகுதிகள்: 

* உயிரிய புவியமைப்பு மண்டலங்களை இயற்கை மற்றும் கலாச்சார வளங்களுடன் உயிரியப் பல்வகைத்தன்மை பாதுகாக்கப்பட்டு சட்டப்பூர்வமான முறையில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. 

* தேசிய பூங்காக்கள், வன உயிரி புகலிடங்கள், சமூக காப்பிடங்கள் மற்றும் உயிர்க்கோள் காப்பிடங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும். 

* உலகளவில் 37000 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உலக பாதுகாப்பு கண்காணிப்பு மையம் அங்கீகரித்துள்ளது. 

* இந்தியாவில் 162099 சதுர கி.மீ. பரப்பளவில் 771 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைந்துள்ளன. 

* இதில் தேசிய பூங்காக்கள் (104), வனவிலங்கு புகலிடங்கள் (544), உயிர்க்கோள காப்பிடங்கள் (18) மற்றும் பல புனித தோப்புகள் ஆகியவை அடங்கும். 

வனவிலங்கு புகலிடங்கள்:

* காப்புக் காடுகள் அல்லது ஆட்சி எல்லைக்குட்பட்ட நீர் நிலைகள் தவிர பிறபகுதிகள் எதுவும் சூழ்நிலை, விலங்குகள், தாவரங்கள், புவியமைப்புகள், இயற்கை மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் பெற்றிருந்தால் அப்பகுதிகளை மாநில அரசு வனவிலங்கு புகலிடமாக அறிவிக்கலாம். 

* அழியும் நிலையில் உள்ள வன விலங்குகளின் பாதுகாப்பு இதன் நோக்கமாகும். 

* வன விலங்குகள் பாதிக்கப்படாத வகையில் மனித நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் சுற்றலா அனுமதிக்கப்படுகிறது. 

* இந்தியாவில் உள்ள 544 புகலிடங்கள் சுமார் 1,18,918 சதுர கி.மீ. பரப்பில் உள்ளன. 

* காட்டு விலங்குகளும், தாவரங்களும் வேட்டையாடப்படவும் திருடப்படவும் இன்றி அடைக்கலம் பெறும் நிலப்பகுதியே வனவிலங்குப் புகலிடம் எனப்படும். 

* வன உற்பத்தி பொருட்கள் சேகரிப்பு, நெறிமுறைக்குட்பட்டு மரம் வெட்டுதல், தனியார் நிலவுடைமை போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவில் பெரியார் வனவிலங்கு புகலிடம், ஆசிய யானை, இந்திய புலிகளுக்கு புகழ் பெற்றதாகும்.

WWF (World Wide Fund): 

* இந்த சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1961. 

* வன விலங்குகளை பாதுகாப்பது மற்றும் இயற்கைக்கு எதிரான மனித செயல்பாடுகளை குறைப்பது போன்றவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். 

* இயற்கைச் சூழல் துண்டாடப்படுவதைத் தடுப்பது மற்றும் மனிதன் வாழத் தேவையான எதிர்கால உயிரிய வளங்களை பாதுகாப்பதும் இந்த அமைப்பின் முக்கியமான அம்சமாகும். 




Tags : Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல்.
12th Zoology : Chapter 12 : Biodiversity and its conservation : Biodiversity and its conservation: Questions and Answers (Evaluation) Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 12 : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : வினா விடை - புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 12 : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு