Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | மலையும் எதிரொலியும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் - மலையும் எதிரொலியும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 3 Chapter 6 : Malayum ethiroliyum

   Posted On :  02.08.2023 11:22 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும்

மலையும் எதிரொலியும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாங்க பேசலாம்


மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பேசுக.

விடை

நான் விடுமுறையில் என் குடும்பத்தினருடன் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறேன். கொடைக்கானலுக்குச் சென்றோம். எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அடர்ந்த செடி கொடிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மலைகளிலிருந்து விழும் அருவி நீர் வெள்ளியைக் காய்ச்சி ஊற்றியதைப் போல உள்ளது. இயற்கை நம் மனதை மிகவும் அமைதியாக வைத்துள்ளது. மலையில் ஏறும் போது வளைந்து வளைந்து செல்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

சிந்திக்கலாமா!


மேலே உள்ள இரண்டு படங்களிலும் நீங்கள் காண்பது என்ன? இருவரில் யாருடைய செயல் சிறந்தது?

விடை

முதல் காட்சியில் நாயின் வாலைப் பிடித்து இழுக்கிறான். அது தவறானது.

இரண்டாவது காட்சி நாயை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறான். இச்செயலே சிறந்தது. பிற உயிர்களிடத்து அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

 

வினாக்களுக்கு விடையளிக்க

1. தந்தையும் மகனும் எங்குச் சென்று கொண்டிருந்தனர்?

விடை

தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

 

2. சிறுவன் பேசியபோது மலை என்ன செய்தது?

விடை

யார் நீ என்று கேட்டது, பிறகு உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று கூறியது.

 

3. சிறுவன் 'நான் அன்பு கொண்டவன்" என்று சொல்லியிருந்தால் மலை என்ன சொல்லி இருக்கும்?

விடை

சிறுவன் நான் அன்பு கொண்டவன் என்று சொல்லிருந்தால் மலையும் நான் அன்பு கொண்டவன் என்று சொல்லியிருக்கும்.

 

4. இக்கதையின் மூலம் தந்தை மகனுக்குக் கூறிய அறிவுரை யாது?

விடை

 நீ மற்றவர்களிடம் அதிகமான திறமையை எதிர்பார்த்தால் முதலில் உன்னுடைய திறமையை அதிகரித்துக் கொள்.

நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது.

உன்னுடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று, அது உன்னுடைய எதிரொலிதான் என்று தந்தை மகனுக்கு அறிவுரை கூறினார்.

 

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டி மகிழ்வோம்


 

விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?


1. வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?

விடை : தட்டு

2. உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?

விடை : மலை

3. நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன், தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

விடை : கடல்

4. நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?

விடை : கண்ணாடி

5. தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?

விடை : விமானம்

 


மொழியோடு விளையாடு


 

குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி

1. மூன்றெழுத்துச் சொல் நடு எழுத்து எடுத்துவிட்டால் படுக்கச் சொல்லும் காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்

விடை : பட்டு

2. நான்கெழுத்துச் சொல் முதல் இரண்டு எழுத்து விடச்சொல்லும் கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார் முதலும் கடையும் வித்தாகும்.

விடை : விடுகதை

3. ஐந்தெழுத்துச் சொல் முதல் இரண்டும் இனிக்கும் கடைசி மூன்றும் பறக்கும் முதலும் கடையும் தேடும் அது என்ன?

விடை : தேன்சிட்டு

 

அறிந்துகொள்வோம்

உலகின் மிக உயரமான சிகரம் - இமயமலையில் உள்ள எவரெஸ்ட்

தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் - ஆனை மலையிலுள்ள ஆனைமுடி

 

செயல் திட்டம்

உனக்குப் பிடித்த செல்லப் பிராணி எது? அதனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்? எழுதி வருக.

விடை

எனக்குப் பிடித்த செல்லப் பிராணி நாய். நான் அதனிடம் அன்பாக நடந்து கொள்வேன். தினமும் காலையும் மாலையும் அதனை அழைத்துக் கொண்டு காலார நடப்பேன். மூன்று வேலையும் அதற்கான உணவைக் கொடுப்பேன். அதனிடம் பேசிக் கொண்டே இருப்பேன். மாலை நேரத்தில் கொஞ்ச நேரம் விளையாடுவேன். எங்களில் ஒருவனாக அந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்வேன். கட்டிப்போட மாட்டேன். சுதந்திரமாக வீடு முழுவதும் சுற்றிவரும் எங்கள் வீட்டு நாய்க்குட்டி.



எழுவாய், பயனிலை அறிவோமா?

 

எழுவாய், பயனிலை அறிமுகம்

சொற்கள் தொடர்ந்து அமைவதே தொடர். ஒரு தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருக்கும். இவற்றுள், செயப்படுபொருள் இல்லாமலும், எழுவாய் தோன்றாமலும் கூட வரலாம். ஆயினும், எழுவாயும் பயனிலையும் ஒரு தொடரில் இன்றியமையாத கூறுகளாக விளங்குகின்றன.


எழுவாய்

முல்லை படம் வரைந்தாள்.

படம் வரைந்தவர் யார் என்னும் வினாவுக்கு விடையாக வரும் முல்லை என்னும் சொல்லே எழுவாய்.

குரங்கு மரத்தில் ஏறியது.

எது மரத்தில் ஏறியது? என்னும் வினாவுக்கு விடையாக வரும் குரங்கு என்னும் சொல்லே எழுவாய்.


ஒரு தொடரில் யார், எவர், எது, எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவதே எழுவாய்.

 

பயனிலை

அவன் வந்து ...

அவன் வந்து சென்றான்

மேற்கண்ட இரு தொடர்களுள் முதல் தொடர் முழுமை பெறவில்லை. ஆனால், இரண்டாம் தொடர் முழுமை பெற்றுள்ளது. ஆகவே, 'சென்றான்' என்பது, இத்தொடரின் பயனிலை.

ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லே பயனிலை.

பயனிலையின் வகைகள்


பயனிலை மூன்று வகைப்படும். அவையாவன:

பெயர்ப் பயனிலை

அவன் வளவன்

இத்தொடரில் அவன் என்பது எழுவாய், வளவன் என்பது பெயர்ப் பயனிலை.

வினைப் பயனிலை

குமரன் பாடினான்

இத்தொடரில், குமரன் என்பது, எழுவாய். பாடினான் என்பது, வினைப் பயனிலை.

வினாப் பயனிலை

நீ யார்?

இத்தொடரில், நீ என்பது, எழுவாய். யார் என்பது, வினாப் பயனிலை.


பெயரைக் கொண்டு முடிவது, பெயர்ப் பயனிலை

வினையைக் கொண்டு முடிவது, வினைப்பயனிலை

வினாவைக் கொண்டு முடிவது, வினாப்பயனிலை.

ஒரு தொடரின் பயனிலையைக் கொண்டே எழுவாயை அறியலாம்.

எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண், இடங்களோடு இயைந்துவரும்.

 

கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிந்து வட்டமிடுக..

1. குழந்தை சிரித்தது.

2. கண்ணன் படம் வரைந்தான்.

3. பூங்கோதை பள்ளி சென்றாள்.

4. அண்ணன் தம்பிக்கு உதவினான்.

5. பறவைகள் வானில் பறந்தன.

6. பசு புல் மேய்ந்தது.

 

கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளுக்கேற்றவாறு அட்டவணைப்படுத்துக.

1. அவர் சிறந்த மருத்துவர்.

2. என்னை அழைத்தவர் யார்?

3. அருளரசன் நல்ல மாணவன்.

4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.

5. முக்கனிகள் யாவை?

6. புலி உறுமியது.


 

Tags : Term 3 Chapter 6 | 4th Tamil பருவம் 3 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 6 : Malayum ethiroliyum : Malayum ethiroliyum: Questions and Answers Term 3 Chapter 6 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும் : மலையும் எதிரொலியும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும்