Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 1 : Amuthendru ber

   Posted On :  29.08.2023 06:24 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 1

திராவிடமொழிக் குடும்பம்

 

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

விடை :

நான் பேசும் மொழியான தமிழ், தென் திராவிட மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது.

 

சிறுவினா

1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

விடை :

. திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளை உடையது.

. மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும்.

. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின்தாய்மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

 

 2. மூன்று என்னும் எண்ணுப் பெயர் பிறதிராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

விடை

திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. மூன்று என்னும் தமிழ் எண்ணுப் பெயர் பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமையும்.


 

நெடுவினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

முன்னுரை :

திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய காலமாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் :

   சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் ஆகும். இதற்கு அடிச்சொல் என்றும் பெயர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் காணமுடிகிறது.

சான்று :7


திராவிட மொழிகளின் எண்ணுப் பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.

சான்று :


திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

நிறைவுரை :

திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத்திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக அமைந்துள்ளது.

 

 

கற்பவை கற்றபின்


1. உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியுமா? உங்கள் பெயரும் நண்பர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ளதா? கண்டறிக.

விடை :

அன்பரசன்   - அன்புக்கு அரசன்

புகழினியன்  - புகழுக்கு இனியன்

அருள்செல்வி  - அருள் நிறை செல்வி

மங்கையர்க்கரசி - மங்கையர்களில் அரசி

அருள்வளவன்  - அருளுடை வளவன்

 

2. பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் வடிவமாற்றம் பெறுகின்றன என்பது குறித்துக் கலந்துரையாடுக.

விடை :

● தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது வேர்ச்சொல் எனப்படும்.

● ஒரு சொல், தோன்றுவதற்கு அடியாக இருப்பது அடிச்சொல் எனப்படும்.

● ஒரு சொல்லின் முதலாக அமைவது முதல் நிலை எனப்படும். அதனை இலக்கண நூலார் பகுதி என்று கூறுவர்.

எ.கா:

செய் - செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த,

செய்வீர், செய்கிறோம்.

வா - வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த,

வருகிறோம், வருவோம்.

          

இயல் ஒன்று

கவிதைப் பேழை

தமிழோவியம்


பாடநூல் வினாக்கள்

நம்மை அளப்போம்

1.    காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ........ இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை.

ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை..

இ) எதுகை, மோனை, இயைபு.

ஈ) மோனை, முரண், அந்தாதி.

விடை:

இ) எதுகை, மோனை, இயைபு.

.

குறுவினா

1.  தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

விடை:

மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்

மட்டுமே போதுமே ஓதி நட

மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும் அதைப் படித்து நடக்க வேண்டும்.

 

2 .“அகமாய் புறமாய் இலக்கியங்கள் - அவை

  அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

இலக்கியங்களின் பாடு பொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

விடை:

பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும் போர் வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன.

 

சிறுவினா

1. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

 விடை:

● தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது.

● தமிழ் மொழி ஏனைய திராவிட மொழிகளைவிட தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.

● பிற மொழித் தாக்கம் தமிழில் குறைவு.

● ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளம் பெற்ற மொழி.

● இந்தியாவில் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழில் அமைந்துள்ளன.

● எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்டு புதுப்புது சொற்களை உருவாக்கி அறிவியல், சமூகம், பண்பாட்டுத் துறைகளில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்.

 

1.  புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் - உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

முன்னுரை :

தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்று செழித்தோங்கி இருக்கிறது. தமிழானது தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலம் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்ற வேண்டும். சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான பங்கினை இக்கட்டுரையில் காண்போம்.

அறிவியல் தமிழ் :

தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகக் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி என்று கொண்டல் சு. மகாதேவன் நிலை நாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர் தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எதிர்வரும் காலங்களில் என் பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.

ஊடகத்துறை :

நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத்துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் வழி என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணைய வலைத் தொலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதி கண்டுபிடிப்புக்கு முயற்சி செய்வேன்.

கணிப்பொறி :

 இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் ஒன்று கணினித்துறை. ஆனால் இதில் இன்று வரை ஆங்கிலமே ஆட்சிசெய்து வருகிறது. மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், மக்களை ஆட்சி செய்கிறது. வளர்ந்து வந்துள்ள உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Vidio Pictures), வரைகலை (Graphies), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகியவற்றை எடுத்துச் சொல்ல தமிழ்ச் சொற்களைப் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.

நிறைவுரை :

 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்; தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் எனும் பாரதியாரின் எண்ணங்களுக்குப் புதுமை வடிவம் தருவேன்.

 

கற்பவை கற்றபின்



1 பிறமொழிகலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்:

விடை :

அவையோர் அனைவருக்கும் வணக்கம் !

என் உரையைக் கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் எங்கள் தமிழ் ஐயா! அவர்களே! என் உடன் பயிலும் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் முன் தனித்தமிழில் உரையாடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

நான் உரையாற்ற எடுத்துக்கொண்ட தலைப்பே, “தனித்தமிழ் என்பதுதான்.

நாம், நம் அன்றாட வாழ்வில் தமிழ்மொழியைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருக்கிறோம். பிறமொழிச்சொற்களைத் தமிழ்மொழி போலவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்பது, பள்ளிக்கு வருவது, கடைக்குச் செல்வது என அனைத்து நிலைகளிலும் நம்மை அறியாமலே பிறமொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். "மெல்லத் தமிழ் இனி சாகும்'' என்று கவிஞர் வருந்தியது போலவே எனக்கும் வருத்தமாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே! அனைத்துத் துறை சார்ந்த சொற்கள், கலைச்சொற்கள் மட்டும் அல்ல அனைத்துத் தரவுகளும் நம் அமுதத் தமிழில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

கணினியைப் பயன்படுத்தும் நாம்....... எப்படித் தமிழைப் பயன்படுத்துவது என தயங்காதீர். அனைத்து கணினி சார்ந்த ஆங்கில வார்த்தைக்கும் செயலி, விரலி, சுட்டி, உலவி.... என தமிழில் சொற்கள் உண்டு.

எனவே, தனித்தமிழ் பயன்படுத்துவோம்! நம் கன்னித்தமிழை வளர்ப்போம்!!

 

2. கவிதையைத் தொடர்க.

அன்னை சொன்ன மொழி

ஆதியில் பிறந்த மொழி

இணையத்தில் இயங்கும் மொழி

ஈடிலாத் தொன்மை மொழி

விடை:

உலகம் போற்றும் மொழி

ஊர்கூடி வியக்கும் மொழி

எங்கும் நிறைந்த மொழி

ஏறுநடை பயின்ற மொழி

ஒற்றுமை வளர்க்கும் மொழி

ஓங்கி வளர்ந்த மொழி

 

        

 

இயல் ஒன்று

கவிதைப் பேழை

தமிழ்விடு தூது

பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

 

1. தமிழ்விடு தூது ……………….. என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்

ஆ) புதுக்கவிதை

இ) சிற்றிலக்கியம்

ஈ) தனிப்பாடல்

விடை:

இ) சிற்றிலக்கியம்

 

2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

 i) ------- இனம்

ii) வண்ணம் ----------

iii) -------- குணம்

iv) வனப்பு ----------

அ) மூன்று, நூறு, பத்து, எட்டு

ஆ) எட்டு, நூறு, பத்து, மூன்று

இ) பத்து, நூறு, எட்டு, மூன்று

ஈ) நூறு, பத்து, எட்டு, மூன்று

விடை:

அ) மூன்று, நூறு, பத்து, எட்டு

 

3. அழியா வனப்பு, ஒழியா வனப்பு சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு

அ) வேற்றுமைத்தொகை

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) பண்புத்தொகை

ஈ) வினைத்தொகை

விடை :

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

 

குறுவினா

1. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

விடை :

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

 

நெடுவினா

1. ‘தூது அனுப்பத் தமிழே சிறந்தது - தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

முன்னுரை :

  தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது ஆகும். வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றும் இதனை அழைப்பர். தலைவர் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் அன்பு காட்டுவர். அதற்கு அடையாளமாக மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகப் பாடுவது ஆகும். இது கலிவெண்பாவால் பாடப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண், தன் காதலைக் கூறிவருமாறு தமிழைத் தூது விடுவதாகப் பாடப்படுவதாகும். கலிவெண்பாவால் பாடப்படும். இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் :

தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் வீடுபேற்றைத் தரும் கனியே! இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்கும் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் மகிழ்ந்து விடுக்கும் விண்ணப்பம் ஒன்றுள்ளது அதைக் கேட்பாயாக.

மூவகைப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

தமிழே, உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புப் பெற்றனர். நீயும் படிக்கக் கொடுப்பாய். அதனால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

‘சிந்து' என்றழைப்பது தகுமோ?

தமிழ்ப்பாவகை அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை , சிந்து என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு கூறிய நா இற்று விழும்.

பத்துக் குணங்கள் பொருந்திய தமிழே!

வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம் (அமைதி) இராச்சம் (தீவிரமான குணம்) தாமசம் (சோம்பல்) மூன்று குணங்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனும் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

நூறு வண்ணங்கள் கொண்ட வண்டமிழே:

மனிதர்களால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை (பொன் நிறம்) பசுமை என ஐந்தே. நீயோ, புலவர்கள் தெளிந்த குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

எட்டழகு பெற்ற கட்டழகுத் தமிழே :

நாவினால் அறியும் சுவைகள் ஆறு. நீயோ, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்களுக்கு அழகு ஒன்றே ஒன்று என்றில்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

 

கற்பவை கற்றபின்


1.  நமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது தமிழ் மொழி என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் உரை ஒன்று எழுதுக.

விடை :

"நண்ணு மிளவைப் பருவத்தி லேமுதல்

நாவை யசைத்த மொழி - எங்கள்

கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்

கருத்தோ டிசைத்த மொழி"

   என்று வரத நஞ்சைய பிள்ளை தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுகிறார். "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல்" ஆகும் என்பது புகழ்மொழியாகும். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாரதியார் பாடினார். தமிழ் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதில் எடுத்துரைக்கத் தக்கதாகும்.

   தமிழ் மொழியிலுள்ள சொற்கட்டமைப்பும் வாக்கியக் கட்டுக் கோப்பும் எளிமையாகவும் திறமாகவும் அமைந்துள்ளன. இலக்கணக் கட்டுப்பாடு மொழிக்கு வேலி போன்றது ஆகும். சொற்கள் இலக்கியத்திற்கு என்றும் இலக்கணத்திற்கு என்றும் தனித்தனியே அமைந்துள்ளன.

   இலக்கியத்திற்கு இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு சொற்களையும் பயன்படுத்துகிறோம். இலக்கணத்திற்குப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் தனியமைப்புப் பயன்பாட்டுக்குரியது.

   தமிழ் மொழியின் இனிமையும் எளிமையும் சமயம் பரப்ப தமிழகத்துக்கு வந்த மேனாட்டுக் கிறித்துவ சமயச் சான்றோர்களைக் கவர்ந்தது. அவர்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் இனிய எளிய தமிழில் எடுத்துரைக்கச் செய்தது.

   இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை வளர்த்தது. தேசியம் தமிழை எடுத்துக் கொண்டது. கருத்துகளையும் எண்ணங்களையும் எடுத்துச் சொல்ல முடிந்தது. அறிவியல் நுட்பங்களை எடுத்துச் சொல்ல புதுப்புதுச் சொற்களைப் படைத்து அளித்ததனால் சொல்வளம் பெருகியது. தமிழ் கணினிப் பயன்பாட்டிற்கு வந்தவுடன் கணினித் தமிழ் என்ற துறை முகிழ்த்தது.

   நமது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க மொழி பயன்பட்டது. அம்மொழி வழியே கருத்துகளைப் பிறருக்குப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

 

2. படித்துத் திரட்டுக.

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்

மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க"

- கவியோகி சுத்தானந்த பாரதியார்.

இப்பாடல் காட்டும் இலக்கியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக.

விடை :

இப்பாடல் காட்டும் இலக்கியங்கள்

குண்டலமும்     - குண்டலகேசி

கைக்கு வளையாபதி   - வளையாபதி

சிந்தாமணி     - சீவக சிந்தாமணி

பொன்முடி சூளாமணி  - சூளாமணி

செங்கோலாய்த் திருக்குறள் - திருக்குறள்

 

| நூல் | குறள் | காப்பியம் | சமயம் | ஆசிரியர் |

குண்டலகேசி _ ஐம்பெருங்காப்பியம் _ பெளத்தம் _ நாதகுத்தனார்

வளையாபதி _ ஐம்பெருங்காப்பியம் _ சமணம் _ பெயர்  தெரிந்திலது

சீவக சிந்தாமணி _ ஐம்பெருங்காப்பியம் _ சமணம் _திருத்தக்க தேவர்

சூளாமணி _ ஐஞ்சிறு காப்பியம் _ சமணம் _ தோலாமொழித் தேவர்

திருக்குறள் _ குறள் _ உலகப்பொதுமறை _ திருவள்ளுவர்

 

 

இளமைத் தமிழே

விரிவானம்

இயல் ஒன்று

வளரும் செல்வம்

பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.


அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை

ஆ) தாழிசை, மானு, பிறவினை, வங்கம்

இ) பிறவினை, தாழிசை, மானு, வங்கம்

ஈ) மானு, பிறவினை, வங்கம், தாழிசை

விடை:

அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை

 

குறுவினா

1. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை தருக.

விடை:

i) Moniter  – திரை  

ii) Mouse  - நகர்த்தி (அல்லது) சுட்டி

iii) Keyboard - விசைப்பலகை

iv) CD  - குறுந்தட்டு

v) Download - பதிவிறக்கம்

vi) File  - கோப்பு

vii) E-Mail - மின்ன ஞ்சல்

 

சிறுவினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

விடை :

சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொற்கள் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளன.

தமிழ்

எறிதிரை - கலன் - நீர் - நாவாய் - தோணி  

கிரேக்கம்

எறுதிரான் - கலயுகோய் - நீரியோஸ் /நீரிய - நாயு - தோணீஸ்

 

2. வளரும் செல்வம் - உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.

விடை :




கற்பவை கற்றபின்


1. நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்து எழுதுக.

விடை :


 

2. உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.

விடை :

அருண் : ஹலோ! நண்பா!

நளன் : வணக்கம் நண்பா ..

அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?

நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது நான்பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ.....

அருண் : நான் நந்தனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.

நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு படிக்கிறான்.

அருண் : மிக்க நன்றி, மீண்டும் சந்திப்போம்.

நளன் : மீண்டும் பார்க்கலாம்.

 

இயல் ஒன்று

கற்கண்டு

தொடர் இலக்கணம்

பாடநூல் வினாக்கள்

 

குறுவினா

1. செய்வினையை, செயப்பாட்டுவினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை சான்றுடன் எழுதுக.

விடை :

செய்வினையை, செயப்பாட்டு வினையாக மாற்ற பயன்படும் துணை வினைகள் படு, பெறு ஆகும்.

  

2. வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடர் வகையைச் சுட்டுக.

விடை :

வீணையோடு வந்தாள் - செய்தித் தொடர்;

கிளியே பேசு - கட்டளைத் தொடர்

 

சிறுவினா

1. தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்திக் காட்டுக.

விடை :

தன்வினை :

வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது

தன்வினை எனப்படும். 

எ.கா: பந்து உருண்டது.

பிறவினை :

வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

எ.கா. பந்தை உருட்டினான்

காரணவினை :

எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரணவினை

எ.கா. பந்தை உருட்ட வைத்தான்.




கற்பவை கற்றபின்


1. தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

விடை :

பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

விடை :

மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே. (இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக)

விடை :

உண்ணும் தமிழ்த்தேனே.

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாக பகுத்துள்ளனர். (இத்தொடரை செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக)

விடை :

திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

விடை :

நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான்.

 

2. சொற்களைத் தொடர்களாக மாற்றுக :

அ) மொழிபெயர் (தன்வினை, பிறவினை தொடர்களாக மாற்றுக)

விடை :

மொழி பெயர்த்தாள் - தன்வினை

மொழி பெயர்ப்பித்தாள் - பிறவினை

 

ஆ) பதிவுசெய் (செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக மாற்றுக)

விடை :

பதிவு செய்தான் - செய்வினை

பதிவு செய்யப்பட்டது - செயப்பாட்டுவினை

 

இ) பயன்படுத்து (தன்வினை, பிறவினைத் தொடர்களாக மாற்றுக)

விடை :

பயன்படுத்துவித்தான் - பிறவினை

பயன்படுத்தினான் - தன்வினை

 

ஈ) இயங்கு (செய்வினை, செயப்பாட்டு வினை தொடர்களாக மாற்றுக)

விடை :

இயங்கினாள் - செய்வினை

இயக்கப்பட்டாள் - செயப்பாட்டுவினை

 

3. பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களைக், நம்மை, வாழ்வியல் அறிவை)

அ) தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.

ஆ) நாம் தமிழிலக்கிய நூல்களை வாங்க வேண்டும்

இ) புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன.

ஈ) நல்ல நூல்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

 

4. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

( நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் இனிய வணக்கம்.

ஆ) அவன் நல்ல நண்பனாக இருக்கிறான்.

இ) பெரிய ஓவியமாக வரைந்து வா.

ஈ) கொடிய விலங்கிடம் பழகாதே.

 

5. பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி மெதுவாகச் சென்றது.

ஆ) காலம் வேகமாக ஓடுகிறது.

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாகக் காட்டுகிறது.

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு.

 

6. அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.

 அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக எழுதுக)

விடை :

நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா? (அல்லது) இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர் யார்?

 

ஆ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக அமைக்க)

விடை :

இசையோடு அமையும் பாடல்

 

இ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக மாற்றுக)

விடை :

நீ இதைச் செய்.

 

7. வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

விடை :

தந்தேன் - உடன்பாட்டு வினைத்தொடர்

தருவித்தேன் - பிறவினைத் தொடர்

 

ஆ) கேள் (வினாத்தொடர் ஆக்குக)

விடை :

கேட்டாயா? - வினாத் தொடர்

 

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர் ஆக்குக)

விடை :

நீ அதைக் கொடு - செய்தித் தொடர்

நீ கொடு - கட்டளைத் தொடர்

 

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத் தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

விடை :

பார்த்தான் - செய்வினைத் தொடர் பார்க்கப்பட்டான் - செயப்பாட்டு வினைத் தொடர்

பார்க்கச் செய்தான் - பிறவினைத் தொடர்

 

8. சிந்தனை வினா

கீழ்க்காணும் சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.

விடை :

அ) அவை யாவும் இருக்கின்றன –

 தவறு (அவை - பன்மை ;  யாவும் - ஒருமை)

அவை யாவையும் இருக்கின்றன. –

சரி (அவை - பன்மை ; யாவையும் - பன்மை )

அவை யாவும் எடுங்கள்   -

தவறு  (அவை யாவும் எடு என்பதே சரி) அவை - பன்மை , யாவும் - ஒருமை, எடு - ஒருமை )

அவை யாவையும் எடுங்கள்   -

தவறு (அவை யாவையும் எடு என்பதே சரி) அவை - பன்மை, யாவையும் - பன்மை, எடு - ஒருமை

அவை யாவற்றையும் எடுங்கள் –

சரி (அவை - பன்மை, யாவற்றையும் - பன்மை)

 

ஆ) நீங்கள் ஒரு நாளிதழில் பணிபுரிகிறீர்கள். அங்குப் புதிய வார இதழ் ஒன்று தொடங்க விருக்கிறார்கள். அதற்காக அந்நாளிதழில் விளம்பரம் தருவதற்குப் பொருத்தமான சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.

விடை :

"தென்றல்" புதிய வார இதழ் வெளியீடு - நாளிதழ் விளம்பரம்

தென்றல் - வார இதழ்

தமிழக இதழியல் வரலாற்றில் பதுத் திருப்பம்

தமிழ் இலக்கிய முன்னோடிகளின்

கட்டுரைகள், கவிதைகள், பேட்டி, விளையாட்டுச் செய்திகள், விளம்பரங்கள்.

முகவர்கள் அணுகவும்: 94434 19040

சென்னை, மதுரை, கோவை, திருச்சி.

பதிப்பகள், படைப்பகள், துணுக்குகள் அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், தென்றல் வார இதழ், 10, வாலாஜா பேட்டை , சென்னை

 

இ) சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றனஎன்பதைப் பதிவு செய்க.

விடை :

சொற்றொடர் வகைகளை சரிவர அறிந்தால் தால் தான் பிழையின்றிப் பேசவும் மரபு மாறாமல் எழுதுவதற்கும் பயன்படுகின்றன.

வகைகள்

வா  - ஒரு சொல் தொடர் 

வந்தான் - வினைமுற்றுத் தொடர்  

வரச்சொன்னான் - வினையெச்சத் தொடர்

வாவா  - அடுக்குத் தொடர்  

வந்த மாணவன் - பெயரெச்சத் தொடர்

பயன்பாடு  

வா - கட்டளைத் தொடராக

வந்த - பள்ளிக்கு வந்த மாணவன்|

வந்து - பள்ளிக்கு வந்து சென்ற மாணவன்

வரச்சொன்னான் - அவன் தான் வரச்சொன்னான்

வருக வருக என வரவேற்றான்

 

ஈ) வந்திருப்பவர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்திலிருந்து நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மொழி மரபை இத்தொடரில் பேணுகிறோமா?

விடை :

வந்திருப்பவர் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தொடரில் “கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்பது ஆங்கிலத்தின் நேரடி மொழி பெயர்ப்பு.

இதைக் கேட்டுக்கொள்கிறோம் - என்ற தொடரில் எழுதுவதுதான் சிறந்தது. இதேபோன்று, வருகையைத் தரமுடியாது. ஆனாலும் அழைப்பிதழ்களிலும் மேடை நாகரிகம் கருதி "வருகை தர வேண்டுகிறோம் என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். நம்மொழி மரபைப் பேணவில்லை. மொழி நடை முறையைப் பின்பற்றுகிறோம்.



மொழியை ஆள்வோம்


1. படித்துச் சுவைக்க :

விறகு நான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த

பிறகுநான் வீணையாய்ப் போனேன்; - சிறகுநான்

சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல் ; செந்தமிழே!

நின்னால் விமானமானேன் நான்!

தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்

வருவாய் எனநீ வருவாய்; - ஒருவாய்

உணவாய் உளதமிழே! ஒர்ந்தேன்; நீ பாட்டுக்

கணவாய் வழிவரும் காற்று! - கவிஞர் வாலி

 

2. மொழி பெயர்க்க :

1. Linguistics – மொழியியல்  

2. Literature - இலக்கியம்

3. Philologist - மொழி ஆய்வறிஞர்

4 . Polyglot - பன்மொழி அறிஞர்

5. Phonologist - ஒலியியல் ஆய்வறிஞர்

6. Phonetics – ஒலியியல்

 

3. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது. (திகழ்)

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள். (கலந்துகொள்)

3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு)

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள். (செல்)

5. தவறுகளைத் திருத்தினான். (திருத்து)

 

4. வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

   மருதூர் அரசு மேனிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த 'உள்ளங்கை உலகம்' என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் (கின்னஸ் சாதனை படைத்த) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.

அறிவிப்பு

நூல் வெளியீட்டு விழா

இடம்  : வெள்ளி விழா அரங்கம், அரசு மேனிலைப் பள்ளி, மருதூர்.

நாள்   : திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆனிமாதம் 7 ஆம் நாள்

(21.06.2018)

முன்னிலை  : பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், திருமிகு . மலரவன் அவர்கள்

தலைமை  : பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. முஸ்தபா, M.A., M.Ed., அவர்கள்,

வரவேற்புரை : இலக்கிய மன்றச் செயலர்

சிறப்புரை  : கின்னஸ் சாதனை படைத்த முன்னாள் மாணவர் கவிஞர். இன்சுவை

நூல் வெளியீடு : பூங்குழலி படைத்த “உள்ளங்கை உலகம்

நன்றியுரை  : ரா. அன்பரசன், பள்ளி மாணவர் தலைவர்.

அனைவரும் வருக! அமுதச் சுவை பருக!!

 

5. தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே

4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

 

6. கடிதம் எழுதுக.

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்' என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

விருதுநகர்,

28.03.2018

அன்புள்ள நண்பன் எழிலனுக்கு,

பாலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள்.

உன் பள்ளியில் திருப்புதல் தேர்வு, தேர்வுகளுக்கான பயிற்சி எல்லாம் நிறைவு பெற்றுவிட்டதா?

எழிலன்...... இந்த கடிதத்தின் நோக்கம் என்ன தெரியுமா? என் பிறந்தநாளை கடந்த மாதம் 7.2.18 அன்று கொண்டாடும்போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய் அல்லவா? சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன்.

எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய "கால்முளைத்த கதைகள் புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன.

சிறுவர்களுக்கான கதைகள், உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா! நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.

அன்புடன்,

பாலன்.

 

முகவரி:

அ. எழிலன், த/பெ மதியரசன்,

1/3, கூலமாட வீதி, கோவை.

 

7. நயம் பாராட்டுக :

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்

பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்

தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே.

அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்

அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே! - ம.இலெ. தங்கப்பா

 

இலக்கிய நயம் பாராட்டுதல்

ஆசிரியர் முன்னுரை :

   ம.இலெ. தங்கப்பா ஓர் இயற்கைக் கவிஞர் பாரதியாரின் 'குயில் பாட்டு ' போல பாடியிருக்கிறார். பாட்டு என்பது இசையுடன் தொடர்பு கொண்டது. அப்போது தான் பாட்டு உயிர் பெறுகிறது. அத்தகைய உயிர்ப்பை இப்பாடலில் காண முடிகிறது.

திரண்ட கருத்து :

   நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற, புனலருவி அழகில், காட்டில், புல்வெளியில், நல் வயலில், விலங்கில், பறவைகளில் இன்னும் தெரிகின்ற பொருள்களில். எல்லாம் பயின்று எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மை ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம் :

   இப்பாடலில் எதுகை நயம் அழகுற அமைந்து விளங்குகிறது எனலாம். அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

சீர் எதுகை :

பொழிகின்ற பொழிலில்

புல்வெளியில் நல்வயலில்

மோனை நயம் :

அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

விரிகின்ற - விண்ணோங்கு

பொழிகின்ற - புனலருவி பொழிலில்

தெரிகின்ற - திகழ்ந்து

தெவிட்டாத - தூய்மை

அழகு  - அகத்திலும்

சொல் நயம் :

கவிஞர், நுண்பாட்டு என்ற சொல்லில் ‘நுட்பமான பாட்டு' என்றே குறிப்பிடுகிறார். பாட்டுக்கு , அழகு என்னும் பேரொழுங்கு' என்ற அடை கொடுத்துப் பாடுகிறார்.

பொருள் நயம் :

விண்ணோங்கு , புனலருவிப் பொழில் , தெவிட்டாத நுண்பாட்டே என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை :

இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை அழகியல் கவிஞர்' என்று கூறினால் அது மிகையாது.

 

 

8. நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க :

உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.

தமிழ் இலக்கிய மன்றம்

அரசு மேனிலைப் பள்ளி, திருவாரூர் - 5 |

உலகத் தாய்மொழி நாள் விழா

நிகழ்ச்சி நிரல்

நாள்  : திருவள்ளுவர் ஆண்டு, ஹேவிளம்பி வருடம், மாசி

மாதம் 9ம் தேதி (பிப்ரவரி 21)

தமிழ்த்தாய் வாழ்த்து :

வரவேற்புரை  : ச.பூங்குன்றன், இலக்கிய மன்றச் செயலர்

தலைமை  : திரு . ப. எழில் முதல்வன், தலைமை ஆசிரியர். முன்னிலை  : திரு. அன்பரசன், தலைவர், முன்னாள் மாணவர் கழகம். சிறப்புரை : முனைவர். சுப. அண்ணாமலை,

தமிழ்ப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 7.

நன்றியுரை   : செ. பூவிழி , 9ஆம் வகுப்பு மாணவி.

நாட்டுப்பண்   : 

அனைவரும் வருக! தமிழமுது பருக!!

 

மொழியோடு விளையாடு


1. அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக

எ.கா: அ) குருவி ஆ) விருது இ) இனிப்பு ஈ) வரிசையாக

அத்தி  -  வியர்வை - துவர்ப்பு -புகழ்ச்சி- கல்வி

திகைப்பு - வைகாசி - புனுகு -  சிகப்பு - விருந்து

புகழ்ச்சி -  சிறப்பு   - குருவி -  புதுமை- துடுக்கு

சிரிப்பு  - புலமை  - வியப்பு - மைந்தா - குரங்கு

புன்னகை- மைசூரூ  -புகுந்து - தாவி  - குத்து

கைபேசி - ரூபாவதி  -துயில்... - விருப்பு - துதி

சிறப்பு   - திங்கள் ……   புகழ்   தித்திப்பு...

புதும

மைனா……

 

 

2. அகராதியில் காண்க.

விடை :

நயவாமை - விரும்பாமை

கிளத்தல் - எழுப்பல், சொல்லுதல், பேசுதல்

கேழ்பு  - நன்மை

புரிசை  - மதில்

செம்மல்  - அரசன், அருகன், தலைமகன், பழம்பூ, புதல்வன்,

 பெருமையிற் சிறந்தோம், உள்ளநிறைவு, நீர், தருக்கு.

 

3. கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.



4. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.

விடை :



5. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க. (திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை )

எ.கா: நான் திடலில் ஓடினேன்.     (தன்வினை)

நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன். (பிறவினை)


விடை :

எழுவாய்/பெயர் | வினைஅடி | தன் வினை | பிறவினை

காவியா   வரை

கவிதை   நனை

இலை    அசை

மழை    சேர்

 

காவியா - வரை

காவியா போட்டியில் வரைந்தாள்.( தன்வினை )

காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள்.. ( பிறவினை )

கவிதை - நனை

கவிதை மழையில் நனைந்தேன்.( தன்வினை )

இரகு கவிதை மழையில் நனைவித்தான். ( பிறவினை )

இலை - அசை

இலை வேகமாக அசைந்தது. ( தன்வினை )

காற்று இலையை வேகமாக அசைவித்தது.( பிறவினை )

மழை - சேர்

மழை மண்ணை சேர்ந்தது.( தன்வினை )

மழைநீரை மண்ணில் சேர்த்தான்.( பிறவினை )

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


விடை :

மனிதர்களே ,

பத்தோடு பதினொன்றாக வாழாதீர்.......

இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று

வேதாந்தம் பேசி மூச்சு முட்டி வாழாதீர்.......

சவாலை சந்தியுங்கள் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்

“வாய்ப்புகளை நழுவ விடாதீர்"

 

செயல்திட்டம்

நீங்கள் வாழும் பகுதியில் மக்கள் பேசும் மொழிகளைப் பட்டியலிட்டு அம்மொழி பேசப்படுகின்ற இடங்களை நிலப்படத்தில் வண்ணமிட்டுக் காட்டுக.


 

உங்களுடைய நாட்குறிப்பில் இடம் பெற்ற ஒருவாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைக் தொகுத்து அட்டவணைப்படுத்துக.

விடை :

திங்கள் –

வருத்தம் தெரிவிக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும் ஆகிய   சொற்றொடர்களை இன்றுஇரண்டு முறை வகுப்பில் பயன்படுத்தினேன். இதனால் புதிய நண்பர் கிடைத்தார்.

செவ்வாய் –

நீ தேர்வில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து - நண்பன் என்னைப் பாராட்டினான் .|

புதன் –

வகுப்பில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ 500ஐ எடுத்து உரியவரிடம் கொடுத்தேன் - தலைமை ஆசிரியர் பாராட்டினார்|

வியாழன் -  

தெருவில் கிடந்த பணப்பையைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் – உரியவர் என்னையும் குடும்பத்தையும் பாராட்டினார்.

வெள்ளி –

வீட்டிற்குத் தேவையான பொருள்களை நானாக முன்வந்து வாங்கிக் கொடுத்தேன் - அம்மா பாராட்டினார்.  

சனி –

மாற்றுத் திறனாளி சாலையைக் கடக்க உதவினேன் - பொதுமக்கள் பாராட்டினர்.

ஞாயிறு –

நூலகத்தில் படியில் தள்ளாடிய பெரியவரை கைப்பிடித்து வழி நடத்தினேன் - பெரியவர் பாராட்டினார்.

 

கலைச்சொல் அறிவோம்

உருபன் - Morpheme

ஒலியன் – Phoneme

ஒப்பிலக்கணம் - Comparative Grammar

பேரகராதி - Lexicon

அறிவை விரிவு செய்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்

மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா

தமிழ்நடைக் கையேடு

மாணவர்களுக்கான தமிழ் - என். சொக்கன்

இணையத்தில் காண்க.

1. திராவிடமொழிகள் http://www.tamilvu.org/courses/degree

/a051/a0511/html/a0511412.htm

2. திராவிட மொழிகளும் தமிழும் http://www.tamilvu.org/ta/courses-

degree-a051-a0511-html-a05115in-9477

 

Tags : Chapter 1 | 9th Tamil இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 1 : Amuthendru ber : Questions and Answers Chapter 1 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்