Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | இலக்கணம்: யாப்பிலக்கணம்

இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: யாப்பிலக்கணம் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

   Posted On :  19.08.2023 09:22 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

இலக்கணம்: யாப்பிலக்கணம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : இலக்கணம்: யாப்பிலக்கணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம்

கற்கண்டு

யாப்பிலக்கணம்



யாப்பின் உறுப்புகள்

கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

உறுப்பியலில் யாப்பின் ஆறு உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.


எழுத்து

யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும்.


அசை

எழுத்துகளால் ஆனது 'அசை' எனப்படும். ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். இது நேரசை, நிரையசை என இருவகைப்படும். 

நேரசை

தனிக்குறில் - ப

தனிக்குறில், ஒற்று - பல்

தனிநெடில் - பா

தனிநெடில், ஒற்று - பால்

நிரையசை

இருகுறில் - அணி

இருகுறில், ஒற்று - அணில்

குறில், நெடில் - விழா

குறில், நெடில், ஒற்று - விழார்


சீர்

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை சீர் ஆகும். இதுவே பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமையும். ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச் சீர் எனச் சீர்கள் நான்கு வகைப்படும். அவை:

நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது உண்டு. அதனை நேர்பு என்னும் அசையாகக் கொள்வர். நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் அசைகள் நிரைபு என்று கூறப்படும். இவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.

ஈரசைச் சீர்களுக்கு, 'இயற்சீர்', 'ஆசிரிய உரிச்சீர்' என்னும் வேறு பெயர்களும் உண்டு. காய்ச்சீர்களை "வெண்சீர்கள்" என்று அழைக்கிறோம்.

ஓரசைச் சீர்

அசை வாய்பாடு

நேர் - நாள்

நிரை - மலர்

நேர்பு - காசு

நிரைபு – பிறப்பு


மூவசைச் சீர்களை அடுத்து நேரசையோ அல்லது நிரையசையோ சேர்கின்ற பொழுது நாலசைச்சீர் தோன்றும்.


அலகிட்டு வாய்பாடு கூறுதல்

நாம் எளிய முறையில் திருக்குறளை இங்கு அலகிடலாம்.

வெண்பாவில் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும்; பிற சீர்கள் வாரா. தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும்; பிற தளைகள் வாரா.

ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஓரசைச் சீர்களில் முடியும்.

இப்போது அலகிடலாம்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் 

அறம்நாணத் தக்க துடைத்து.


பாட நூலில் வந்துள்ள பிற குறட்பாக்களுக்கும் அலகிடும் பயிற்சி மேற்கொள்க.

தளை

பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் தளை எனப்படும். இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும். அது ஏழு வகைப்படும். 

1. நேரொன்றாசிரியத்தளை - மா முன் நேர் 

2. நிரையொன்றாசிரியத்தளை - விளம் முன் நிரை

3. இயற்சீர் வெண்டளை - மா முன் நிரை, விளம் முன் நேர் 

4. வெண்சீர் வெண்டளை - காய் முன் நேர் 

5. கலித்தளை - காய் முன் நிரை 

6. ஒன்றிய வஞ்சித்தளை - கனி முன் நிரை 

7. ஒன்றா வஞ்சித்தளை - கனி முன் நேர்

அடி

இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது' அடி' எனப்படும். அவை ஐந்து வகைப்படும்.

இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி; மூன்று சீர்களைக் கொண்டது சிந்தடி; நான்கு சீர்களைக் கொண்டது அளவடி; ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி; ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது கழிநெடிலடி. 

தொடை

தொடை - தொடுத்தல். பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது 'தொடை' ஆகும். தொடை என்னும் செய்யுள் உறுப்பு, பாடலில் உள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள் தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என்று எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.

மோனைத் தொடை: ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது. (எ.கா.) 

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் 

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

எது கைத் தொடை: அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது. (எ.கா.) 

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 

அறனல்ல செய்யாமை நன்று.

இயைபுத் தொடை: அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது. (எ.கா.)

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் 

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

Tags : Chapter 8 | 9th Tamil இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 8 : Enthalai kadane : Grammar: Yapilakkanam Chapter 8 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : இலக்கணம்: யாப்பிலக்கணம் - இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே