Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 9th Tamil : Chapter 9 : Anpenum arane

   Posted On :  19.08.2023 10:01 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

வாழ்வியல்: திருக்குறள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

திருக்குறள்

 

16. பொறையுடைமை

1) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

2) பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

3) இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

4) நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும்.

5) ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

6) ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.

7) திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று.

8) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

9) துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

10) உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

 

21. தீவினையச்சம்

1) தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

2) தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

3) அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

4) மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

5) இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

6) தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

7) எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.

8) தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.

9) தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

10) அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

 

42. கேள்வி

1) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

2) செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

3) செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

4) கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

5) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

6) எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

7) பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்.

8) கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

9) நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.

10) செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

 

51. தெரிந்து தெளிதல்

1) அறம்பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்.

2) குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாண்உடையான் கட்டே தெளிவு.

3) அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

4) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

5) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

6) அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்

பற்றிலர் நாணார் பழி.

7) காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.

8) தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

9) தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.

10) தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

 

59. ஒற்றாடல்

1) ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

2) எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.

3) ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்.

4) வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.

5) கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.

6) துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து

என்செயினும் சோர்வுஇலது ஒற்று.

7) மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

8) ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

9) ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்

சொல்தொக்க தேறப் படும்.

10) சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.

 

66. வினைத்தூய்மை

1) துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.

2) என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

3) ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

4) இடுக்கண் படினும் இழிவந்த செய்யார்

நடுக்கு அற்ற காட்சி யவர்.

5) எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

6) ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

7) பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

8) கடிந்த கடிந்து ஓரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.

9) அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

10) சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துநீர் பெய்திரீஇ யற்று.

 

81. பழைமை

1) பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

2) நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு

உப்புஆதல் சான்றோர் கடன்.

3) பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை?

4) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்

கேளாது நட்டார் செயின்.

5) பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க

நோதக்க நட்டார் செயின்.

6) எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

7) அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.

8) கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாள்இழுக்கம் நட்டார் செயின்.

9) கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.

10) விழையார் விழையப் படுப் பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.

 

82. தீ நட்பு

1) பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை

பெருகலின் குன்றல் இனிது.

2) உறின்நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?

3) உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

4) அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.

5) செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

6) பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்

ஏதின்மை கோடி உறும்.

7) நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்

பத்து அடுத்த கோடி உறும்.

8) ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்ஆடார் சோர விடல்.

9) கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

10) எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

 

84. பேதைமை

1) பேதைமை என்பது ஒன்று யாதெனின் ஏதம்கொண்டு

ஊதியம் போக விடல்.

2) பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்.

3) நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.

4) ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான் அடங்காப்

பேதையின் பேதையார் இல்.

5) ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்

தான்புக்கு அழுந்தும் அளறு.

6) பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேல் கொளின்.

7) ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

8) மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.

9) பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவது ஒன்று இல்.

10) கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.

 

85. புல்லறிவாண்மை

1) அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை

இன்மையா வையாது உலகு.

2) அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்

இல்லை பெறுவான் தவம்.

3) அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.

4) வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு,

5) கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

6) அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.

7) அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

8) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும் ஓர் நோய்.

9) காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

10) உலகத்தார் உண்டென்பது இல்என்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.

 

86. இகல்

1) இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.

2) பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

3) இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இல்லாத்

தாவில் விளக்கம் தரும்.

4) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.

5) இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே

மிகல்ஊக்கும் தன்மை யவர்.

6) இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.

7) மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.

8) இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.

9) இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.

10) இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.

 

96. குடிமை

1) இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.

2) ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.

3) நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

4) அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

5) வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.

6) சலம்பற்றிச் சால்பில செய்யார்மாசு அற்ற

குலம்பற்றி வாழ்தும்என் பார்.

7) குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

8) நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

9) நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

10) நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.

 

99. சான்றாண்மை

1) கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு,

2) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

3) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு)

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

4) கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.

5) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.

6) சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.

7) இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு?

8) இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பு என்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

9) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்.

10) சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.

 

102. நாண் உடைமை

1) கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.

2)  ஊண்உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறுஅல்ல

நாண்உடைமை மாந்தர் சிறப்பு.

3) ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு.

4) அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்

பிணிஅன்றோ பீடு நடை?

5) பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு,

6) நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.

7) நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாண்ஆள் பவர்.

8) பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.

9) குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்

நாணின்மை நின்றக் கடை,

10) நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.

 

104. உழவு

1) சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

2) உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

3) உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்

தொழுது உண்டு பின்செல் பவர்.

4) பலகுஉடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்

அலகுஉடை நீழ லவர்.

5) இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது

கைசெய்துஊண் மாலை யவர்.

6) உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

7) தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்

வேண்டாது சாலப் படும்.

8) ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்

நீரினும் நன்று அதன் காப்பு.

9) செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

10) இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம் என்னும் நல்லாள் நகும்.

 

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 150 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம். வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வைக்கலாம்.

குறட்பாக்கள் தொடர்பான கதைகள், நாடகங்களை இலக்கியமன்ற கூட்டங்களில் நடத்தச் செய்யலாம்.

குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து "வினாடி வினா" நடத்தலாம்.

உலகப் பொதுமுறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.

Tags : Chapter 9 | 9th Tamil இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 9 : Anpenum arane : Valviyal: Thirukkural Chapter 9 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே