Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai

   Posted On :  03.08.2022 07:29 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 2

பெய்யெனப் பெய்யும் மழை 

இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல்


• உரைநடை - பெருமழைக்காலம் 

• செய்யுள் - பிறகொரு நாள் கோடை - அய்யப்ப மாதவன் 

செய்யுள் - நெடுநல்வாடை - நக்கீரர்

• துணைப்பாடம் - முதல்கல் - உத்தமசோழன் 

• இலக்கணம் - நால்வகைப் பொருத்தங்கள்



இயல் 2

உரைநடை உலகம்

பெருமழைக்காலம்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம் 

அ) பருவநிலை மாற்றம்

ஆ) மணல் அள்ளுதல் 

இ) பாறைகள் இல்லாமை

ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்

[விடை: ஆ) மணல் அள்ளுதல்]


2. “உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுபடுத்த முடியும்” - இத்தொடர் உணர்த்துவது 

அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது 

ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது 

இ) காலநிலை மாறுபடுகிறது 

ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது

[விடை : அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது]


குறுவினா 


1. ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் முழக்கத் தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?

‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்ற முழக்கத் தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்.

• மழைக்கு ஆதாரம் மரம். 

• உயிர்வளிக்கு உதவுவது மரம். 

• மண் அரிப்பைத் தடுக்கும் மரம். 

• மரம் தரும் நிழல் குளிர்ச்சி என்று கூறுவேன்.


2. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான் - இரு தொடர்களாக்குக. 

• மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான். 

• மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான்.


சிறுவினா


1. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக. 

• வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

• நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும். 

• வடிகால் வசதியை மேற்கொள்ள வேண்டும். 

• இயல்பாகவே பெருமழையைத் தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகளைச் சேதப்படுத்தாமல் தூர் வார்தல் வேண்டும். 

• சூறாவளி, புயல், வெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வை அனைத்துப் பொதுமக்களும் பெறும் விதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். 


2. பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக.

• பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23.12.2005 இல் தொடங்கப்பட்டது. 

• புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ விபத்து. பனிப்புயல், வேறு விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும் போது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது. 

• இக்குழுக்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி அனைத்து நிலைகளிலும் பேரிடர்க் காலங்களில் இவ்வாணையம் செயல்பட வழிவகை செய்துள்ளது. 

• அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.


நெடுவினா 


1. 'நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

பெருமழைக்காலம் 

அயோத்திதாசர் : வணக்கம் ஐயா! நான் உங்களைக் காண்பதில் மிக்க 

மகிழ்ச்சி அடைகிறேன்.                        

பசுமைதாசர் : வணக்கம். மிக்க மகிழ்ச்சி. 

அயோத்திதாசர் : நெகிழி என்றால் என்னங்க ஐயா!

பசுமைதாசர் : நெகிழி என்பது திடப்பொருள். இச்சொல்லை பிளாஸ்டிக் என்றும் அழைப்பர். பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் உருவானது.

அயோத்திதாசர் : நெகிழி தோன்றியதின் வரலாறு கூறமுடியுமா ஐயா. 

பசுமைதாசர் : நெகிழி செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது.  1862 இல் இலண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பாக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. 

அயோத்திதாசர் : நெகிழியின் பயன்பாடுகள் பற்றிச் சில கூறுங்கள் ஐயா.

பசுமைதாசர் : பொதுவாக நெகிழி பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் தீமைகளே அதிகம். 

இன்றும் நாம் கையாளும் பொருள்கள் அனைத்திலும் நெகிழி உதவி இல்லாமல் இல்லை. காலை கண் விழித்து பல்துலக்கப் பயன்படுத்தும் பொருள் முதல், இரவு படுக்கைக்கு செல்லும் போது படுக்கும் பாய் வரை ஒவ்வொன்றும் நெகிழியால் உருவாக்கப்பட்டது.

அயோத்திதாசர் : நல்லது ஐயா! அப்ப நெகிழி இல்லாமல் நாம் இல்லை.

பசுமைதாசர் : அப்படிச் சொல்லக்கூடாது. நம்முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நெகிழி இல்லையே! 

அயோத்திதாசர் : சரிங்க ஐயா! நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றி எனக்கு விரிவாக விளக்குங்கள் ஐயா!

பசுமைதாசர் : நெகிழியைப் பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி தாவர இனம் அழிகிறது. தாவர இனம் அழிவதால் மழை வளம் குறைகிறது. மழை இல்லை என்றால் மனிதர் இல்லையே. 

அயோத்திதாசர் : மேலும் அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா! 

பசுமைதாசர் : உறுதியாகச் சொல்கிறேன்! 

நீர்செல்லும் கால்வாய்களில் நெகிழி அடைக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நெகிழியை எரிப்பதால் டையாசீன் என்ற நச்சு வெளிப்பட்டு பல்வேறு நோய்கள் உருவாகிறது. சூடான பொருள்கள் நெகிழிப் பைகளில் வாங்கி உண்பதால் புற்றுநோய் உருவாகிறது. அவற்றைச் சில விலங்குகள் உண்ணுவதால் அவைகளும் மடிகின்றன.

அயோத்திதாசர் : நன்றிங்க ஐயா! 

பசுமைதாசர் : துணிப்பை எளிதானது தூர எறிந்தால் எருவாகும்..... நெகிழிப் பை அழகானது. தூர எறிந்தால் விட(ஷ)மாகும்........ 

என்பதற்கு ஏற்ப நாம் நெகிழியைப் பயன்படுத்துவதைச் சிறிது சிறிதாக குறைப்போம்.

மண் வளம் காப்போம்! மழை வளம் பெருக்குவோம்! 

மரம் நடுவோம்!  மனித குலம் தழைப்போம்! 

வாழ்க வளமுடன்! நன்றி! 

அயோத்திதாசர் : நன்றி!


கற்பவை கற்றபின்


1. வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ்ச் செய்திகளைத் தொகுக்க. 

கடலூர்.

2015 இல் உலகையே உலுக்கிய வெள்ளம் கடலூரில். எங்குப் பார்த்தாலும் ஆடு, மாடுகள் இறந்துக்கிடக்கும் காட்சி கடலூர், தாழங்குடா, திருவந்திபுரம், நத்தம், ஞானமேடு போன்ற பகுதிகளில் குடிசை வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் இல்லை , குடிநீர் இல்லை , நீர் தேங்கியதால் தொற்று நோய்கள். சிறுவர் முதியவர் இறப்பு எண்ணற்ற குடும்பங்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

2004ஆம் ஆண்டு இதே கடலூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் சுனாமி ஊருக்குள் புகுந்தது. வீடுகள், மரங்கள், மீன் பிடித்தொழில் செய்வோரின் பொருள்கள், படகுகள் எல்லாம் கடலில் மூழ்கி நிலைகுலைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தை, கணவனை இழந்த மனைவி என்று அரைகுறை வாழ்க்கையை ஏற்படுத்தியது. 


2. ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்நாளில் பள்ளியின் கூட்டத்தில் ஏற்க வேண்டிய உறுதிமொழியை உருவாக்குக. 

• மரம் வளர்ப்போம்!

மழை பெறுவோம்!!

• நெகிழியைத் தவிர்ப்போம்! 

மண் வளம் பாதுகாப்போம்!!

• வாகனப்புகை குறைப்போம்! 

வளமான வாழ்வு வாழ்வோம்!!

• மழைநீர் தேங்காமல் பாதுகாப்பாகச் சேகரிப்போம்! 

கொசுவை ஒழிப்போம்!!

• மக்கும், மக்காக் குப்பை எனப் பிரிப்போம்! 

மானிட சமுதாயம் காப்போம்!!

• துணிப்பையைத் தூக்குவோம்!

துக்கமின்றி வாழ்வோம்!!


இயல் 2

செய்யுள்

பிறகொரு நாள் கோடை

- அய்யப்ப மாதவன்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது 

அ) சூரிய ஒளிக்கதிர்

ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள்

ஈ) நீர்நிலைகள்

[ விடை : இ) மழைத்துளிகள் ]


குறுவினா 


1. ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’- விளக்கம் தருக.

• மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது. 

• திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது. 

• சில மழைத்துளிகளின் மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.


சிறுவினா 


1.“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து 

உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” - இக்கவிதையின் அடி, 

‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே' என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக. 

‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்' 

• ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. 

• விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒரு துளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான். 

• அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான். இஃது ஓர் நீர்வட்டம். 

“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குறித்து 

உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” 

• நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான். 

• வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கின்றான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

நயம் :

• நாட்டுப்புறப்பாடலில் ஒரு துளி பனி நீரைக்கூட சூரியன் விடுவதில்லை; தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடப்படுகிறது. 

• 'பிறகொரு நாள் கோடை' கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பும் நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார். 

• பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் - நாட்டுப்புறப்பாடல். 

• நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் - பிறகு ஒரு நாள் கோடை.


கற்பவை கற்றபின் 


‘மழை’ தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குக. 

ஒரு மழைத் துளி

யாருமில்லா பெருவெளியில்

ஒற்றை மழைத் துளி!


ஒரே ஒரு பூவின் 

இதழின் இடைவெளியில்

உட்புகுந்து 

வெளியேறும் தருணத்தில்!


எங்கிருந்தோ வந்த

வண்டொன்று

துளியின் மிச்சத்தையும்

துடைத்தெரிந்தது.


மழை

வானம் மனம் 

குளிர்ந்து 

தன்

நேசமான உறவான 

பூமிக்குப் பரிசாக 

அளிக்கும் அதிசய 

விந்தையே 

"மழை"  


அழகு மழை

மழை அழகு!

மழையில் நனைவது அழகு!

மழையின் ஊடே வெயில் அழகு!

மழையில் குழந்தையின் காகிதக் கப்பல்

அழகு!

மழைக்குப் பின் மண் வாசனை அழகு!

மழை இரவின் குளிர் அழகு!

அடுத்தநாள் பெய்யும் மழையும் அழகு! 


மழை பெய்கிறது

எல்லோருக்கும்

பொதுவாக்கத்தான் பெய்கிறது 

மழை ..... 


சிலர் நனைகிறார்கள்!

சிலர் குடை பிடிக்கிறார்கள்! 

சிலர் ஓடி ஒளிகிறார்கள்! 


ஆனால்...... 


குழந்தைகள் மட்டுமே அம்மாவின் பிடியிலிருந்து விலகி

மழையில் 

நனைகிறார்கள்.


இயல் 2

செய்யுள்

நெடுநல்வாடை

- நக்கீரர்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. பொருத்தக. 

அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன 

ஆ) பசுக்கள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன 

இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின 

ஈ) விலங்குகள் - 4. மேய்ச்சலை மறந்தன 

அ) 1, 3, 4, 2 

ஆ) 3, 1, 2, 4 

இ) 3, 2, 1, 4 

ஈ) 2, 1, 3, 4 

[ விடை : ஆ) 3, 1, 2, 4 ]


2. ‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு 

அ) வினைத் தொகை

ஆ) உரிச்சொல் தொடர் 

இ) இடைச்சொல் தொடர்

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

[ விடை: ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ]


குறுவினா


1. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக. 

இனநிரை - இனம் + நிரை 

‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்' என்ற விதிப்படி, மவ்வீறு ஒற்றழிந்து ‘இனநிரை' எனப் புணர்ந்தது.


சிறுவினா 


1. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

• வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. 

• தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகிறது.

• கோவலர்கள் தாங்கள் மேயவிட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு மாற்றினர். 

• பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைந்ததால் வருந்தினர். 

• தண்ணீர் தாழ்வான பகுதியில் நிரம்பி விடும் என்பதால் பாதுகாப்பிற்காக மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த்துளிகள் மேலே படுவதாலும், வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.


நெடுவினா 


1. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.

• ஐப்பசி மாதம் அடை மழைக்காலம் என்பார்கள். பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது. 

• முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழை குளிரால் ஏற்படும் தாக்கத்தினை நெடுநல்வாடை வருணனை செய்கிறது. 

• மேகம் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாக சூழ்ந்து எழுந்தது. உலகம் குளிரும்படியாக மழைப் பொழிந்தது. மழை வெள்ளம் தாழ்வானப் பகுதியை நோக்கிச் சென்றது. வெள்ளத்தை வெறுத்த மக்கள் / வளைந்த கோலையுடைய ஆயர்கள் தம் நிரைகளை மேடான பகுதியில் மேயவிட்டனர். 

• மக்கள் தாம் பழகிய நிலத்தைவிட்டு வேறு இடம் சென்றதால் வருத்தம் அடைந்தனர். கோவலர்கள் சூடியிருந்த காந்தள் மாலை கசங்கியது. குளிரால் மக்கள் கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர், பற்கள் நடுங்கியது. 

• விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன; குரங்குகள் நடுங்கின; பறவைகள் நிலத்தில் விழுந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. 

• மலையையே குளிரச் செய்வன போன்று இருந்தது என்று நக்கீரர் மழைக்கால வருணனையினை நெடுநல்வாடையில் பதிவு செய்கிறார். 


கற்பவை கற்றபின்


தற்கால வாழ்க்கைமுறையில் மழை, குளிர் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக. 

ஆசிரியர் : மாணவ - மாணவியருக்கு வணக்கம், இன்று, மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பாதிப்புப் பற்றி உங்களோடு கலந்துரையாட வந்துள்ளேன். 

மாணவர்கள் : ஐயா! அறிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கிறோம். 

ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி! சொல்கிறேன். 

மாணவர்கள் : உறுதியாக ஐயா! நாங்கள் உங்கள் அறிவுரைப்படியே நடந்து கொள்வோம் ஐயா! 

ஆசிரியர் : நல்லது, அன்பு மாணவர்களே!

முதலாவதாக மழைக்காலப் பாதிப்பு : 

• மழைக்காலங்களில் மழை - ஆடை அணிந்து கொள்ளவில்லை என்றால் சளி, சுரம் இவைகளின் வாயிலாக உடல் பாதிப்புக்கு உள்ளாகும். 

• வீட்டினைச் சுற்றி மேடான அமைப்பு இல்லை எனில் மழை நீர் தேங்கும். நீர்தேங்கினால் கொசுத்தொல்லை ஏற்படும் அபாயம் ஏற்படும். 

• மழைக்காலத்தில் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்றல், மரங்களுக்குக் கீழே

நிற்றல் போன்ற செயல்களாலும் பாதிப்பு மற்றும் ஆபத்து ஏற்படும். 

• மொட்டை மாடியின் மேல் நீர்தேங்காமல் பாதுகாக்க வேண்டும், தேங்கினால் மேற்கூரை நீரினால் ஊறி வீடே இடிந்துவிழும் சூழல் ஏற்படும். 

• குளிர்காலங்களில், தலைக்கு கம்பளி ஆடை, காதுக்கு அடைப்பானும் அணிய வேண்டும், இல்லையெனில் குளிர்க்காற்று காதில் புகுந்து காய்ச்சில், சளி தொந்தரவினை உண்டாக்கும். அதிகமான குளிர் சிறு குழந்தைகளுக்குச் சிறுசிறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். 

• எனவே, வருமுன்னர் காப்போம் என்னும் கூற்றுப்படி நம்மை நாமே காக்க முற்பட வேண்டும்.



இயல் 2

துணைப்பாடம்

முதல்கல்

- உத்தமசோழன்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.

முன்னுரை :

உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

மழையின் கோரம் :

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தக் தாழ்வு மண்டலத்தால் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம் போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன். 

உபரிநீர் வெளியேற்றம் :

காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான். உபரித் தண்ணீர் வெளியேற வேண்டிய மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மண்டிக்கிடந்த நெய்வேலி காட்டாமணக்கு தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும். 

மருதனின் நல்யோசனை :

மருதன், பயிர்கள் மூழ்காமலும் மொத்த கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியைப் பிடுங்கி அரிந்தான். 

மாரி வருதல் :

மாரி இந்தச் சனியன்பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்ததை எண்ணி மருதன் கோபம் அடைந்தான். 

மருதனின் ஆக்கம் :

இப்படியே போனால் ஊரே நாற்றம் எடுத்து விடும் என்று ஏக்கத்தோடு செடிகளைப் பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளியப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான். அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான்.

மருதனின் புலம்பல் :

வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன  வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான். 

அல்லி வருதல் :

முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி. தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள்.

மாமா நீ சொல்றது நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள்.

ஊர் மக்கள் வரல் :

நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்டு வாய்க்காலில் இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது. 

முடிவுரை : 

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கும் 

ஊதியமும் சூழ்ந்து செயல்”

என்பதற்கு ஏற்பவாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராய்ந்து செயல்பட்டு ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்புநலன் பாராட்டத்தக்கது. 


2. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக. 

அனுப்புநர்

ஊர்ப் பொது மக்கள், 

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி. 


பெறுநர்

உயர்திரு மின்வாரியப் பொறியாளர், 

மின்வாரிய அலுவலகம்,

திருநெல்வேலி.

ஐயா,

பொருள் : மின் இணைப்புகளைச் சரி செய்ய வேண்டுவது தொடர்பாக. 

வணக்கம்.

கடந்த மாதம் நான்காம் நாள் பாளையங்கோட்டையில் வீசிய தானே புயலால் மரங்கள் மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகிவருகின்றனர். இரவில் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. ஆதலால் அருள்கூர்ந்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைச் சரிசெய்து மின் இணைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,


இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள, 

ஊர்ப் பொது மக்கள். 

பாளையங்கோட்டை.


உறைமேல் முகவரி:

உயர்திரு மின்வாரியப் பொறியாளர், 

மின்வாரிய அலுவலகம், 

திருநெல்வேலி.


கற்பவை கற்றபின்


உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று ஒன்று தருவதாக முடிவு செய்துள்ளீர்கள். மரக்கன்று வாங்கும் நோக்கங்களையும் அதனைப் பயிரிடுவதால் ஏற்படும் பொது நன்மைகளையும் கொண்ட இருபக்கச் சிற்றேட்டை உருவாக்குக.

மரக்கன்று வழங்குதன் நோக்கம் : 

• மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழல்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குதல். 

• பழம், பட்சணம், வெற்றிலை போன்றவற்றைப் பையிலே போட்டுக் கொடுப்பதைவிட மரக்கன்றுகள் கொடுப்பது சாலச்சிறந்தது. 

• சுற்றுச்சூழலை நல்லமுறையில் அமைக்கவே மரக்கன்றுகள் வழங்குதல். 

பொது நலன்கள் : 

• மரக்கன்றுகள் வளர்ப்பதால் நல்ல தூய காற்று கிடைக்கும். 

• கோடையில் நிழல் உருவாகும். 

• மரங்கள் மாசுக்களைக் கட்டுப்படுத்தும்

• மரங்கள் குளிர்ச்சி தரும் 

• குளிர்ச்சியால் மழை உண்டாகும்.

• மழை பொழிந்தால் மண் மகள் சிலிர்ப்பாள். 

• மழையால் பயிர்வளம் பெருகும். 

• பயிர்வளத்தால் விவசாயம் பெருகும். 

• விவசாயம் பெருகினால் வீடு நலம் பெறும். 

• வீடு நலம் பெற்றால் நாடு தானே வளம் பெறும்.



இயல் 2

இலக்கணம்

நால்வகைப் பொருத்தங்கள்


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. தமிழில் திணைப்பாகுபாடு ________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது. 

அ) பொருட்குறிப்பு

ஆ) சொற்குறிப்பு 

இ) தொடர்க்குறிப்பு

ஈ) எழுத்துக்குறிப்பு

[ விடை : அ) பொருட்குறிப்பு ]


2. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே 

அஃறிணை என்மனார் அவரல பிறவே” - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் 

அ) நன்னூல்

ஆ) அகத்தியம் 

இ) தொல்காப்பியம்

ஈ) இலக்கண விளக்கம்

[ விடை : இ) தொல்காப்பியம் ]


3. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே 

அ) அஃறிணை, உயர்திணை

ஆ) உயர்திணை, அஃறிணை 

இ) விரவுத்திணை, அஃறிணை

ஈ) விரவுத்திணை, உயர்திணை

[ விடை : ஆ) உயர்திணை, அஃறிணை ]


4. பொருத்துக. 

அ) அவன் அவள் அவர் - 1. உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை 

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - 2. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை 

இ) நாம் முயற்சி செய்வோம் - 3. தன்மைப் பன்மைப் பெயர்கள் 

ஈ) நாங்கள், நாம் - 4. பதிலிடு பெயர்கள் 

அ) 4, 1, 2, 3 

ஆ) 2, 3, 4, 1 

இ) 3, 4, 1, 2 

ஈ) 4, 3, 1, 2 

[ விடை : அ) 4, 1, 2, 3 ]


5. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை? 

திணை, பால், எண், இடம். 


6. உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக. 

• நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். 

• அவர்கள் ஆலயம் வந்தார்கள்.


கற்பவை கற்றபின்


இடப்பாகுபாடு தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைப் பாடப்பகுதியிலிருந்து சான்று காட்டுக.

தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.

சான்று: நான் புத்தகம் படித்தேன். 

தன்மைப் பன்மை

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும். 

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டுப் பேசுவது. 

சான்று: நாம் முயற்சி செய்வோம்.

உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை

பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மைப் பன்மையில் பேசுவது. சான்று: நாங்கள் முயற்சி செய்வோம்.


நம்மை அளப்போம்


பலவுள் தெரிக. 

1. பொருத்தக. 

அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன 

ஆ) பசுக்கள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன 

இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின 

ஈ) விலங்குகள் - 4. மேய்ச்சலை மறந்தன 

அ) 1, 3, 4, 2 

ஆ) 3, 1, 2, 4 

இ) 3, 2, 1, 4 

ஈ) 2, 1, 3, 4 


2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

அ) சூரிய ஒளிக்கதிர் 

ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள் 

ஈ) நீர்நிலைகள் 


3. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்

அ) பருவநிலை மாற்றம் 

ஆ) மணல் அள்ளுதல்

இ) பாறைகள் இல்லாமை 

ஈ) நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல் 


4. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு

அ) வினைத்தொகை 

ஆ) உரிச்சொல் தொடர் 

இ) இடைச்சொல் தொடர் 

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


5. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது 

அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது 

ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது 

இ) காலநிலை மாறுபடுகிறது 

ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது


குறுவினா 


1. ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்? 

2. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக. 

3. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் - இரு தொடர்களாக்குக. 

4. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.


சிறுவினா


1. 'நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து 

உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்' - இக்கவிதையின் அடி, 

'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே' என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக. 

2. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

3. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக. 

4. பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக


நெடுவினா 


1. 'நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. 

2. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க. 

3. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க. 

4. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.



மொழியை ஆள்வோம்  


சான்றோர் சித்திரம்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878) என்று, இன்றும் நினைவு கூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், 'நீயே புருஷ மேரு ....' என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம். இவர், மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர்; தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவர், தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க சுப்பிரமணிய தேசிகர் போன்றோரிடம் நட்புப் பாராட்டி நெருங்கியிருந்தார்; கி.பி. 1805 முதல் கி.பி. 1861ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம்' என்ற நூலாக வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்; வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றறிந்திருந்தார். இவர், பெண்கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார். இவருடைய மொழியாட்சிக்குச் சான்றாக, பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு பத்தி:

"கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக்கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எள்ளளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்?" என்றார்.

வினாக்கள்: 

1. தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தின் பெயர் என்ன? 

2. தமிழின் முதல் நாவல் எது? அதனை எழுதியவர் யார்? 

3. மாயூரம் வேதநாயகம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் யாவர்? 

4. தமிழின் முதல் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்? 

5. பார்த்தாள் - பகுபத உறுப்பிலக்கணம் தருக. 

6. மாயூரம் வேதநாயகம் எழுதிய நூல்கள் யாவை? 

7. 'சொன்னேன்' - இச்சொல்லின் வேர்ச்சொல் எது?


விடைகள்: 

1. தாது வருடப் பஞ்சம்.

2. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். அதனை எழுதியவர் மாயூரம் வேதநாயகம். 

3. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர். 

4. மாயூரம் வேதநாயகம். 

5. பார்த்தாள் - பார் + த் + த் + ஆள் 

பார் - பகுதி 

த் - சந்தி 

த் - இறந்தகால இடைநிலை

ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதி 

6. ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்' என்ற பெயரில் வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். 

7. வேர்ச்சொல் - ‘சொல்'. 


மொழிபெயர்ப்புப் பகுதியைப் படித்து, இருபது ஆங்கிலச் சொற்களையும் அதன் தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக.

In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democracy. This led Kenya to Kenya's first fully democratic elections in a generation. In the election, Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformend the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.

1977ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள், இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்கப் பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல் ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர். அவர் இந்த இயக்கத்தின் வழியாக மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல்முறையாகத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இத்தேர்தலில் வங்காரி மத்தாய் . நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார். கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி, மூன்றுகோடி மரங்களை நட்டு வளர்த்ததால் அவரது தன்னலமற்ற பணியைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

எ.கா: Green Belt Movement - பசுமை வளாக இயக்கம் 

1. devastation - பேரழிவு

2. deforestation - காடழிப்பு

3. thirty years - முப்பது ஆண்டுகள்

4. founded - நிறுவப்பட்டது

5. regions - மண்டலங்கள்

6. providing - விநியோகம்

7. halting - ஓய்விடங்கள்

8. soil erosion - மண்ணரிப்பு

9. desertification - பாலைவனமாக்கல்

10. enlighten - அறிவூட்டல்

11. representative - பிரதிநிதி

12. generation - தலைமுறை

13. democracy - குடியாட்சி

14. parliament – நாடாளுமன்றம்

15. election - தேர்தல் 

16. success – வெற்றி

17. tens of thousands - பல்லாயிரக்கணக்கான

18. thirty million – மூன்று கோடி

19. social forestry schemes - சமூக காடுகள் வளர்ப்புத் திட்டம் 

20. Minister of environment - சுற்றுச்சூழல் அமைச்சர்


மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. தலை, தளை, தழை 

2. கலை, களை, கழை 

3. அலை, அளை, அழை

எ.கா : விலை, விளை, விழை

கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.

1. தலை, தளை, தழை 

ஆட்டிற்குத் தழை திருடப்போன இடத்தில் மரத்தில் தலை தட்டி விழுந்தவனைத் தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் அழைத்துச் சென்றான்.

2. கலை, களை, கழை 

கழை காட்டில் தீப்பிடித்ததால் களைகளுடன் கலைமான்களும் செத்து மடிந்தன.

3. அலை, அளை, அழை 

கடலலையில் விளையாடச் சென்ற முருகன் அளையில் இருந்த அரவம் தீண்ட எத்தனை முறை அழைத்தும் பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்தான்.


இலக்கிய நயம் பாராட்டுக

வெட்டியடிக்குது மின்னல் - கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; 

தொட்டியிடிக்குது மேகம் - கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று 

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் 

எட்டுத்திசையும் இடிய - மழை 

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

- பாரதியார்

முன்னுரை :

இப்பாடலைப் பாடியவர் மகாகவி பாரதியார் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்த இவர் இளைமையிலே கவிப்பாடும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காக அநேக பாடல்களைப் பாடியதால் தேசியக் கவி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் நூல்கள் மிகவும் சிறப்புப் பெற்றவையாகும். 

திரண்ட கருத்து :

பூமியை நோக்கி அடிக்கும் மின்னலானது பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருக்கின்றது. சூறாவளி காற்று அடிப்பதால் விண்ணைத் தொடும் அளவிற்கு கடலலையானது பொங்குகின்றது. மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் ஓசையானது காதால் கேட்க முடியாத அளவிற்குக் கொட்டி இடிக்கின்றது. ‘கூகூ' என்ற ஓசையுடன் காற்றானது வேகமாக வீசி விண்ணைக் குடைகின்றது. மழைத்துளி மண்ணில் விழும் போது உண்டாகும் ஒலியோ மத்தளங்கள் இசைத்துத் தாளம் போடுவது போல ஒலிக்கின்றன. இடைவிடாமல் மழையைப் பொழிந்து பொழிந்து வானம் கனைக்கின்றது. எட்டுத்திசையும் இடியின் ஓசை கேட்க மழை எப்படிப் பூமியை வந்தடைந்தது. 

மோனை நயம் :

குயவனுக்குப் பானை 

செய்யுளுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். 

சான்று:

வெட்டியடிக்குது வீரத் 

ட்டுத்திசையும் ங்ஙனம் 

எதுகை நயம் :

மதுரைக்கு வைகை 

செய்யுளுக்கு எதுகை

முதலெழுத்து அளவு ஒத்துநிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். 

சான்று:

வெட்டியடிக்குது 

தொட்டி 

ட்டச்சட

ட்டுத்திசையும் 

அணி நயம் :

அணியற்ற கவிதை 

பிணியுள்ள வணிதை

மழையின் சிறப்பை உணர்த்த மழை பெய்வதற்கு முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளான இடி இடித்தல், மின்னல், காற்று வீசுதல் ஆகிய நிகழ்வுகளை எல்லாம் உயர்வுபடுத்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது. 

சொல் நயம் :

சொல் போனால் 

பல் போகும்

பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் ஒலிக்குறிப்புகளும் பொருளும் ஒரு பெரும் புயலை நம் கண்முன் காட்டுகின்றன. புதிய ஒலியின்பத்தையும் புதிய பொருளுணர்ச்சியையும் பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

சந்த நயம் :

சந்தம் தமிழுக்குச் சொந்தம்

ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்போருக்கும் மிகுந்த இன்பம் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் சிந்துப் பா வகையைச் சார்ந்ததாகும். 

முடிவுரை :

கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது. 


கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக.

பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் 

நாள் : அக்டோபர் 2

நேரம் : காலை 10 மணி 

இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை .

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை : திருமதி. அரசி,

செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் 

முன்னிலை : திரு. அமுதன், இயற்கை வேளாண் உழவர் 

தலைமையுரை : திரு. இமயவரம்பன்,

பேரிடர் மேலாண்மை இயக்குநர்

கருத்தரங்கத் தலைப்புகள் 

• இயற்கைச் சீற்றங்களும் - பருவகால மாற்றங்களும் - முனைவர்

செங்குட்டுவன் 

• பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் - திரு. முகிலன்

• நீர்வழிப்பாதைகளைப் பாதுகாத்தல் - திருமதி. பாத்திமா 

• பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் - திரு. வின்சென்ட்

நன்றியுரை : பர்வீன், பசுமைப்படை மாணவர் தலைவர். நாட்டுப்பண்

பத்தி:

அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு இயற்கை வேளாண் உழவர் திரு, அமுதன் முன்னிலை வகிக்கிறார். இக்கருத்தரங்கில் முனைவர் செங்குட்டுவன் அவர்கள் இயற்கைச் சீற்றங்களும் பருவகால மாற்றங்களும் என்ற தலைப்பிலும், திரு. முகிலன் அவர்கள் பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் என்ற தலைப்பிலும், திருமதி. பாத்திமா அவர்கள் நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலும், திரு. வின்சென்ட் அவர்கள் பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் என்ற தலைப்பிலும் கருத்துகளைத் தர உள்ளனர்.

கருத்தரங்கின் நிறைவாக, பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. இமயவரம்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசி அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் ஜமீலா அவர்கள் நன்றியுரை ஆற்றிட உள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், கருத்தரங்க நிறைவில் நாட்டுப்பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற உங்கள் அனைவரையும் அன்புடன்  அழைக்கின்றோம்.


மொழியோடு விளையாடு


புதிர்க்கேற்ற விடையை அறிக.

அ) அடைமழை பெய்த அடுத்த நாள்

படைபடையாய் வந்ததாம் 

பரங்கி நாட்டு விமானம் 

எதிரி சுடாமலேயே 

இறகொடிந்து இறந்ததாம் - என்ன? 

விடை : ஈசல்


ஆ) தண்ணீரும் மழையும் இல்லாமல்

பயிர் பச்சையாய் இருக்கிறது 

பாக்கு வெற்றிலை போடாமல் 

வாய் சிவப்பாய் இருக்கிறது - என்ன? 

விடை : கிளி


இன்னும் புதிர் அறிவோம்

1. கறுத்த ரோஜா மொட்டு 

கனத்த மேகம் கண்டு 

கணத்தில் இதழ் விரித்திடும் 

காத்திடும் பின் சாய்ந்திடும் 

அது என்ன? 

விடை : குடை 


2. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்

மூத்த பெண் ஆற்றிலே; 

நடுப்பெண் காட்டிலே; 

கடைசிப் பெண் வீட்டிலே; 

அவைகள் யாவை? 

விடை : முதலை, உடும்பு, பல்லி


3. நான் ஏறும் குதிரை 

நாலுகால் குதிரை 

அந்தக் குதிரைக்கு 

ஆயிரம் கண்கள் அது என்ன? 

விடை : கட்டில்


எண்ணங்களை எழுத்தாக்குக


வளமாக எல்லோரும் வாழ வசதியான இயற்கையைத் தந்த பூமியாகிய நான் இன்று வெப்பமிகுதியால் உருகிக் கொண்டிருக்கின்றேன். பச்சை பட்டாடை உடுத்தி பசுமையைத் தந்த என்னை வெம்மை என்னும் காட்டிலே தள்ளி விடும் மனித இனமே நான் இல்லை என்றால் நீ எப்படிப் பூமியில் வாழ்வாய்...!

எல்லா காலங்களிலும் பருவங்கள் தவறாது மழையைத் தந்தேன். நீங்கள் எல்லோரும் வளமாய் வாழ நல்ல நிலத்தைத் தந்தேன். உங்களுடைய சுயநலத்திற்காக என் அன்பு மகளாம் வளமான காட்டை அழித்து என்னை வறுமையாக்கி, வறட்சியை உண்டுபண்ணியது ஏன்? 

இன்றைய வெப்ப மிகுதியால் என் உடல் சூடேறுகிறது. என்னைக் குளிர்விக்க வேண்டிய நீங்களே மீண்டும் மீண்டும் மரங்களை வெட்டுக்கின்றீர்கள் என்று எனக்காக அல்ல உங்களுக்காகக் கேட்கிறேன்: எப்போது ஒரு மரத்தை நடப்போகின்றீர்கள் அனலாகக் கொதிக்கும் என் உடலைக் கொஞ்சமாவது குளிர்விப்பாயா?

நஞ்சாகி வரும் நெகிழியை முற்றிலுமாகத் தவிர்த்து விடு. என் மேனியடையும் சூட்டைக் குறைத்து விடு; எல்லா வளத்தையும் இலவசமாகத் தரும் என்னைக் காக்க மறந்திடாதீர்கள்! வரும் தலைமுறையினரும் வாழ்ந்திட நீங்கள் தடையாக இருக்காதீர்கள். 


மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக உங்கள் பள்ளி தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுது. 

அனுப்புநர்

அஅஅஅ , 

நிலை 12 'அ' பிரிவு, 

அரசு மேனிலைப்பள்ளி, 

திருச்சி - 4. 


பெறுநர் 

உயர்திரு. தலைமையாசிரியர் அவர்கள், 

அரசு மேனிலைப்பள்ளி, 

திருச்சி - 4. 


ஐயா, 

பொருள் : மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுவது தொடர்பாக. 

வணக்கம்.

நான் தங்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு 'அ' பிரிவில் பயின்று வருகின்றேன். தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியமாகும்.

எனவே, மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த போதிய விழிப்புணர்வை உரிய நபர்கள் மூலம் வழங்கினீர்கள் என்றால் எங்களுக்கு மிகுந்த நன்மையாக இருக்கும்.

ஆகவே, தாங்கள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து அனைத்து மாணவர்களும் போதிய விழிப்புணர்வைப் பெற உதவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

திருச்சி,

09.07.2019.


இப்படிக்கு, 

தங்கள் உண்மையுள்ள,

அஅஅஅ.


செய்து கற்போம்

உங்கள் பகுதியில் புழங்கும் இருபது சொற்களைக் கொண்டு வட்டார வழக்குச் சொல் தொகுப்பு ஒன்றை உருவாக்குக. 

1. நான் சொல்லுதேன் - நான் சொல்கிறேன் 

2.அவன் நிக்கான் - அவன் நிற்கிறான் 

3. நீங்க வருதியகளா? - நீங்கள் வருகிறீர்களா? 

4. ஏளா ! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்? 

5. முடுக்குது - நெருங்குகிறது 

6. சொல்லுதான் - சொல்கிறான் 

7. செய்தான் – செய்கிறான்

8. ஆச்சி - வயதான பெண்மணி / பாட்டி 

9. ஏல(லே) - நண்பனை அழைப்பது 

10. மக்கா - நண்பா 

11. பைதா - சக்கரம் 

12. கொண்டி - தாழ்ப்பாள் 

13. பைய - மெதுவாக 

14. சாரம் - லுங்கி 

15. கோட்டி - மனநிலை சரியில்லாதவர் 

16. வளவு - முடுக்கு, சந்து 

17. சிரை - தொந்தரவு 

18. மச்சி - மாடி 

19. ஆக்கங்கெட்டது - கெட்ட நேரம் 

20. செத்த நேரம் - கொஞ்ச நேரம்


நிற்க அதற்குத் தக


அது ஒரு மழைக்காலம், அதிகளவு மழையினால் வெள்ளம் வரக்கூடிய நிலை குறித்து அரசு அறிவிப்பு வெளியாகிறது. அரசின் துண்டறிக்கை உங்கள் கைகளில்...

அ) எச்சரிக்கை நடவடிக்கைகள்

• வெள்ள நீருக்கு அருகே வரவோ, வெள்ளநீரில் விளையாடவோ கூடாது

ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும். 

• சாக்கடை நீர் ஓட அமைக்கப்பட்டுள்ள வடிகால்கள், வாய்க்கால்கள்,  கழிவுநீர்த் தொட்டிகள்  போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• வெள்ளநீரில் பாம்புகள் மிதந்து வரும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கையாய்க் கைகளில் கொம்புடன் (தடி) இருங்கள்.

• உங்கள் வீட்டில் உள்ள கழிப்பிடத் துளை மற்றும் குளியலறைத் துளை மீது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, தெருவில் ஓடும் வெள்ள நீர் மற்றும் கழிவுநீர் வீட்டிற்குள் புகாதபடி செய்யுங்கள்.

• அறுந்த மின்கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள். மின் சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவற்றின் வழியாக மின்சாரம் தாக்கி மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆ) சுகாதார நடவடிக்கைகள்

• கொதிக்க வைத்த நீரையே அருந்துங்கள்.

• மூடிவைக்கப்பட்டுள்ள, சமைத்த சூடான உணவுகளையே உண்ணுங்கள்.

• சமைத்த உணவு,சமைக்கத் தேவையில்லாத உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

• வயிற்றுப்போக்கு இருந்தால், அரிசிக்கஞ்சி, இளநீர், பால் கலக்காத தேநீர், மோர் பருகலாம்.

• அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்களை அணுகி உப்பு, சர்க்கரைக் கரைசல் பொட்டலங்களை வாங்கி அதைக் குடிக்கலாம்.

• சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாக்க பிளீச்சிங்பவுடர், சுண்ணாம்புத்தூளைப் பயன்படுத்தவும்.

குறிப்புகளைப் படித்த நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள்? 


படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர்வண்டி நிலையம்)

Platform - நடைமேடை  

Ticket Inspector - பயணச்சீட்டு ஆய்வர் 

Train Track - இருப்புப்பாதை 

Level Crossing - இருப்புப்பாதையைக் கடக்குமிடம் 

Railway Signal - தொடர்வண்டி வழிக்குறி

Metro Train - மாநகரத் தொடர்வண்டி


அறிவை விரிவு செய்

• பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார் 

• தமிழ் நடைக் கையேடு

• இயற்கைக்கு திரும்பும் பாதை - மசானா ஃபுகோகா  

• சுற்றுச்சூழல் கல்வி – ப. ரவி 

• கருப்பு மலர்கள்  - நா. காமராசன்

• வானம் வசப்படும் - பிரபஞ்சன்

Tags : Chapter 2 | 12th Tamil இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai : Questions and Answers Chapter 2 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை