Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

   Posted On :  03.08.2022 08:46 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 7

அருமை உடைய செயல்

நாடு, அரசு, சமூகம், நிருவாகம்


• உரைநடை - இலக்கியத்தில் மேலாண்மை - வெ. இறையன்பு இ.ஆ.ப 

• செய்யுள் - அதிசய மலர் -  தமிழ்நதி

செய்யுள் - தேயிலைத் தோட்டப் பாட்டு - முகம்மது இராவுத்தர் 

செய்யுள் - புறநானூறு - பிசிராந்தையார்

• துணைப்பாடம் - சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் - ஐராவதம் மகாதேவன்

• இலக்கணம் - தொன்மம் 



இயல் 7

உரைநடை உலகம்

இலக்கியத்தில் மேலாண்மை

- வெ. இறையன்பு இ.ஆ.ப.


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. ‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

அ) சோழன் நெடுங்கிள்ளியை - பாணர் 

ஆ) சோழன் நலங்கின்னியை - கோவூர் கிழார் 

இ) கணைக்கால் இரும்பொறையை - கபிலர் 

ஈ) கரிகாலனை - உருத்திரங்கண்ணனார்

[விடை : ஆ) சோழன் நலங்கின்னியை - கோவூர் கிழார்] 


குறுவினா 


1. பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

• சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர். 

• 'பருவத்தே பயிர் செய்' என்பது அனுபவச் சொல்.

• ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும். 

• பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது - கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.


சிறுவினா


1. வேளாண்மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

வேளாண்மைக்குள்ளும் மேலாண்மை கூறுகள் உண்டு. சரியான பயிர், உரிய நேரத்தில் விதைத்தல் நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பின் பாதுகாத்தல் நல்ல விலைவரும் வரை இருப்பு வைத்தல்.

• ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்போடும், பொறுப்போடும் செயல்பட்டால் வேளாண்மை செழிக்கும். 

• மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை. 


2. எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக. 

• நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா' அறியாது. 

• ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா' உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம்மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது. 

• அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.


நெடுவினா


1. நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை : 

• உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதில்லை. 

• யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும். 

• தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு. 

இதையே நாலடியார், 

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தாழுகின் 

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் 

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு 

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” என்று பக்குவமாகக் கூறுகிறது.

• நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். 

• வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன். அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவான்

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை :

• டைமன் என்பவன் ஏதேன்ஸ் நகரில் இருந்தன். அவன் வரவு குறைந்தாலும் செலவு அதிகம் செய்தான்.

• அவன் உதவியாளர் நிதி நிலைமையைப் பேசும் பொழுதெல்லாம் கேட்க மறுத்தான். 

• கடன் ஒரு நேரத்தில் கழுத்தை நெறித்தது. அப்போதும் அவன் வருந்தவில்லை. 

• அவன் தான் அளித்த விருந்தை உண்பவர் உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான். 

• சேவகர்கள் நான்கு திசைகளிலும் சென்று வெறும் கையோடும் வெளிரிய முகத்தோடும் திரும்பினார்கள். 

• டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான். 

ஔவையாரின் நிருவாக மேலாண்மை :

தாம் ஈட்டும் பொருளினைவிட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள். எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர். 

“ஆன முதலில் அதிகம் செலவானால் 

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை 

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” 

என்ற பாடல் மூலம் ஔவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.


கற்பவை கற்றபின்


புறச்சூழல்களுக்கு ஏற்ப உங்கள் நேர மேலாண்மையைப் பயன்படுத்திக் கல்வியில் கவனம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடுக. 

(நேசனும், வாசனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வாசன் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்குவான். நேசன் குறைவான மதிப்பெண்களே வாங்குவான். ஒருநாள் கல்வி பற்றி இருவரும் உரையாடுகின்றனர்) 

நேசன் : வாசன் நீ எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறாய். என்னால் அது முடியவில்லையே என்ன காரணம் கூற முடியுமா. 

வாசன் : வகுப்பில் ஆசிரியர் பாடத்தை நடத்தும் போது நன்றாகப் படிப்பேன். வீட்டிற்கு வந்தபின் இரண்டு முறை படிப்பேன். 

நேசன் : வீட்டிற்கு வந்து இரண்டு முறை படிப்பாயா?

எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது! 

வாசன் : ஏன் நேரம் கிடைக்காது! மாலை 5 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு தேநீர் அருந்துவேன். அறை மணி ஓய்வெடுப்பேன். சரியாக 6 மணிக்கு படிக்க ஆரம்பித்துவிடுவேன்.

நேசன் : அப்படியாநான் 5 - 6 பள்ளியிலேயே கிரிக்கெட்விளையாடுவேன். 6 - 8 தொலைக்காட்சி பார்ப்பேன். 9 மணிக்குச் சாப்பிடுவேன். 9 - 10 க்குள் தூங்க ஆரம்பித்து விடுவேன்.

வாசன் : தயவுசெய்து நான் சொல்வதைக்கேள். இனிமேல் என்னைப் பின்பற்று. என் அறிவுரைகளைக் கேள். 

நேசன் : சரி அப்படியே செய்கிறேன் சொல். 

வாசன் : காலை 5 மணிக்குள் எழுந்திரு.

முகம் கழுவி, பல் துலக்கி, 5.15 க்குள் புத்தகத்தைக் கையில் எடு. 

1.30 மணி நேரம் தொடர்ந்து படி. 

7.30 க்குள் குளி, பள்ளிக்குத் தயாராகு. 

8 மணிக்குச் சாப்பாடு 

8.30 மணிக்குப் பள்ளி 

5 - 6 மணிக்கு வீடு திரும்பு 

6 - 8 வரை தொலைக்காட்சி, விளையாட்டுகளைத் தவிர்த்துப் படி. நிச்சயம்

முன்னேற்றம் கிட்டும். 

நேசன் : நன்றி நண்பா, நிச்சயம் உன் பேச்சைக் கேட்பேன், வெற்றி பெறுவேன்.




இயல் 7

செய்யுள்

அதிசய மலர்

- தமிழ்நதி


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக 

1. அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது 

அ) கடந்தகால துயரங்களை

ஆ) ஆட்களற்ற பொழுதை 

இ) பச்சயம் இழந்த நிலத்தை

ஈ) அனைத்தையும்

[விடை : ஈ) அனைத்தையும்] 


சிறுவினா 


1. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்? 

• புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்குப் பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று. 

• ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், உலாவிய யானையின் எச்சத்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி. 

• எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் என்று தமிழ்நதி கூறுகிறார். 


2. ‘எங்கிருந்தோ வருகிறது 

வண்ணத்துப் பூச்சியொன்று 

பறவைகளும் வரக்கூடும் நாளை' - இடம்சுட்டிப் பொருள் விளக்குக. 

இடம் :

தமிழ்நதியின் ‘அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் ‘அதிசய மலர்' என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளன. 

பொருள் :

மலரைத் தேடி வண்ணத்துப் பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள். 

விளக்கம்:

மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசய மலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.


கற்பவை கற்றபின்


போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படிக்க.

போருக்கு எதிராக குரல்கள்....... 

இன்று காலையும் போர் விமானங்கள் எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின. சிலர் பதுங்கு குழிக்குள் 

அடைக்கலம் சிலர் வெளியே நின்று வெறுத்துப் பார்த்தனர். 

குண்டுகள் வீழ்ந்தன 

கிராமத்தின் மத்தியில் புகை மண்டலம் 

சிலருக்குக் காயம்; சிலர் மாயம் 

எத்தனை பேர் மாண்டனர் 

பலருக்கு அந்தக் கணக்குதான் தேவை 

பாழும் உலகம் பரிதாபப்படவில்லை. 

எங்கள் மேல் விழுமோ கிழக்கில் வெள்ளி வருமோ!


மனிதம் விற்று மதி போற்றும் 

மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம் 

மதம் தன்னை ஆயுதமாய் ஏந்தி 

பகுத்தறியாமல் பகை கொள்வதா 

படைகொண்டு தாக்கினால் பாவம்


நாங்கள் என்ன செய்வோம் 

பாதி பேர் கைது பாதி பேர் காணோம் 

பக்கத்து வீட்டில் அப்பா இல்லை 

என் வீட்டில் என் அண்ணன் இல்லை 

எதிர் வீட்டில் என் நண்பன் இல்லை 

எங்கே போனார்கள் ஆண்டு 

இரண்டாயிற்று சேதி இல்லை 

இறைவனும் எங்கள் முன் வரவில்லை 

ஏதேனும் கேட்கலாம் என்றால் 

எதைக் கேட்பது எதை விடுவது 

மீண்டு வருமா மாண்ட உயிர்கள் 

மறு பிறவியிலாவது ஆண்டவா 

என்னை படைப்பதை நீ மறந்து விடு.





இயல் 7

செய்யுள்

தேயிலைத் தோட்டப் பாட்டு

- முகம்மது இராவுத்தர்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக. 

1. முச்சந்தி இலக்கியம் என்பது 

கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது 

கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது 

அ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

ஆ) கூற்று 1, 2 சரி 

இ) கூற்று 1, 2 தவறு

ஈ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

[விடை :ஆ) கூற்று 1, 2 சரி]


2. உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் பெயரெச்சம் 

அ) உண்டு 

ஆ) பிறந்து

இ) வளர்ந்த 

ஈ) இடந்தனில்

[விடை: இ) வளர்ந்த]



குறுவினா 


1. எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக

• நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா' அறியாது. 

• ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா' உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணஒர்ச்சி பெற்று நம்மனதை சிந்திக்கத் தூண்டுகிறது.

• அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.


நெடுவினா 


1. எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன - நிறுவுக. 

முன்னுரை:

நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் கதைப் பாடல்கள் வாயிலாக விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை எதார்த்தமாக வடிக்கின்றனர். அந்த வகையில் ‘தேயிலைத் தோட்டப் பாட்டு' என்ற பாடல்களின் வாயிலாக மக்களின் வலிகளை இங்குப் பதிவு செய்யப்படுகிறது. 

துயரங்கள்: 

• விளிம்புநிலை மக்களின் வாழ்வு துயரம் தோய்ந்தது. 

• அவர்களின் விம்மி விம்மி அழுதக் குரலைக் காற்று கேட்டிருக்கலாம். 

• அவை வெகுசனங்களிடையே நாட்டுப்புற இலக்கிய வடிவில் கும்மிப்பாடலாக அவர்களின் துயரம் போக்கின. அப்பாடல்களுள் தேயிலைத் தோட்டப்பாட்டு வாயிலாக அறியலாம். 

• பழங்காலத்தில் நம் தேசத்தில் பலவிதக் கைத்தொழில்கள் சிறப்புப் பெற்று விளங்கியது.

• நாகரீகத்திலும் ராஜரீகத்திலும் நாடெங்கும் எந்நாளும் கொண்டாடினர். 

• இத்தகு சீரும் சிறப்பும் கொண்ட நம் தேசத்தில் அன்னியர்கள் புகுந்தனர். 

• நம்பண்பாட்டையும், நாகரிகத்தையும் கைத்தொழிலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை அடித்து நம்மை அற்ப பிராணி போல் செய்தனர். 

• உண்டு பிறந்து வளர்ந்த இடங்களில் பலவேலை செய்த நாம் இன்று மனைவி குழந்தைகளோடு நாயினும் கீழாகினோம். 

கங்கானியின் செயல்: 

• விளம்பர சுவரொட்டி ஒட்டி வேலைக்கு அழைத்தனர். 

• ஆலைக் கரும்பு போல நம் உழைப்பைப் பிழிந்தும் குரங்கைப் போல் நம்மை ஆட்டிப் படைத்தும் ஒன்றுக்குப் பத்தாகப் பொய் கணக்கெழுதினர். 

• தயவு ஏதுமில்லாமல் கூலித் தொழிலாளிகளைக் கப்பலில் ஏற்றி இலங்கை, அந்தமான் தீவுக்குக் கொண்டு சென்றனர். 

• உண்ண உணவுக்கும், கைப்பிடிச் செலவுக்கும் துன்பப்பட்டு மண்ணுளிப் பாம்புப் போல மனைவி மக்களோடு வாழ்ந்தனர். 

• சகோதர, சகோதரிகளே கண்காணிப்பவர் கூறும் பொய்யுரைகளை கண்டு மயங்காதீர்.

முடிவுரை:

வறுமை, பினி, ஏமாற்றம் போன்றவை எளிய மக்களின் வாழ்க்கை வழிகளை பிரதிபலிக்கின்றன. இப்படியே இவர்கள் கூலித்தொழிலாளியாய்த் தேயிலைத் தோட்டத்தில் (இந்தியர்) நாம் துன்பப்படுவதற்குக் கல்வி, ஒழுக்கம், நாகரிகம் இல்லாத குறையே. இன்றே உணருங்கள் நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுக் கொடுத்து, குறையில்லாமல் ஒற்றுமையாய் ஊரில் கட்டுப்பாட்டோடு வாழ்வோம்.


கற்பவை கற்றபின்


1. உங்கள் பகுதியில் உள்ள வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து, சிறப்பு மலர் உருவாக்குக.

தாலாட்டு பாட்டு : 

மாமன் அடிச்சானோ மல்லிகப்பூச் செண்டால 

மன்னவனே அழலாமோ தேம்பித்தேம்பி அழலாமோ 

ஆராரோ ஆராரோ...... 

அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால 

ஆனந்த பொன்மணியே தேம்பித் தேம்பி அழலாமோ 

பாட்டி அடிச்சாளோ பாலூட்டும் சங்கால 

பாராளும் மன்னவனே தேம்பித் தேம்பி அழலாமோ 

அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டால 

ஆடி வரும் மயிலழகே தேம்பித் தேம்பி அழலாமோ 

ஆராரோ ஆராரோ 

நீ அழுத கண்ணீரு நெல்லுக்கும் இஞ்சிக்கும் 

நீராய்ப்பாயுதடா 

ஆராரோ ஆராரோ.

ஏற்றப்பாட்டு :

மழையை நம்பி ஏலேலோ மண் 

இருக்க ஐலசா 

மண்ணை நம்பி ஏலேலோ 

மரம் இருக்க ஐலசா 

மரத்தை நம்பி ஏலேலோ 

கிளை இருக்க ஐலசா 

கிளையை நம்பி ஏலேலோ 

இலை இருக்க ஐலசா 

இலையை நம்பி ஏலேலோ 

பூவிருக்க ஐலசா 

பூவைநம்பி ஏலேலோ 

பிஞ்சிருக்க ஐலசா 

பிஞ்சை நம்பி ஏலேலோ 

காயிருக்க ஐலசா 

காயை நம்பி ஏலேலோ 

பழம் இருக்க ஐலசா 

பழதை நம்பி ஏலேலோ 

மகன் இருக்க ஐலசா 

மகனை நம்பி ஏலேலோ 

நீ இருக்க ஐலசா 

உன்னை நம்பி ஏலேலோ 

நான் இருக்க ஐலசா 

என்னை நம்பி ஏலேலோ 

எமன் இருக்க ஐலசா 

எமனை நம்பி ஏலேலோ 

காடிருக்க ஐலசா 

காட்டை நம்பி ஏலேலோ 

புல்லிருக்க ஐலசா.

ஒப்பாரிப் பாட்டு : 

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு 

நான் ஒய்யாரமா வந்தேனே 

இப்ப நீ பட்ட மரம்போல 

பட்டு போயிட்டியே.


பொட்டு இல்ல பூவில்லை 

பூச மஞ்சலும் இல்ல 

நான் கட்டன ராசாவே 

என்ன விட்டுத்தான் போனிங்க


பட்டு இல்லை தங்கம் இல்லை 

பரிமார பந்தல் இல்ல 

படையெடுத்து வந்த ராசா 

பாதியில் போரிங்கலே


நான் முன்னே போரேன் 

நீங்க பின்னே வாருங்கோ 

எனச் சொல்லிட்டு 

இடம் பிடிக்கப் போயிதிங்களா


நான் காக்காவாட்டும் கத்தரனே, 

உங்க காதுக்குக் கேக்கலையா 

கொண்டு வந்த ராசாவே 

உங்களுக்குக் காதும் கேக்கலையா.



இயல் 7

செய்யுள்

புறநானூறு

- பிசிராந்தையார்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. யானை புக்க புலம்போலத் - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் 

அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது 

ஆ) தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது 

இ) பிறருக்குப் பயன்படும் தனக்குப் பயன்படாது 

ஈ) தனக்கும் பயன்படும் பிறருக்கும் பயன்படும்

[விடை : அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது]


குறுவினா 


1. அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை? 

• அறிவுடை அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிக்கணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.

 • அறிவில் குறைந்து முறை தெரியாது வரி திரட்டினால் யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும். 


2. செவியறிவுறூஉ துறையை விளக்குக. 

அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும். 


சிறுவினா


1. யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.

உவமை :

சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். 

பொருள்:

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். 

உவமை :

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். 

பொருள் :

அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.


கற்பவை கற்றபின்


1. சிறந்த அரசு நிர்வாகத்திற்கு நீவிர் அளிக்கும் பரிந்துரைகளை நாளிதழ்த் தலையங்கமாக எழுதுக. 

நாட்டிற்கு வேண்டிய நல்லமைச்சு : 

• நாடோறும் நாடி முறை செய்யா மன்னன் நாள்தோறும் நாடு கெடும். 

• நாள்தோறும் மக்களின் தேவையைப் புரிந்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். 

• காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். 

• காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் பேசாதவனாக மன்னன் இருக்க வேண்டும்.

• அரசின் எல்லாத்துறைகளும் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும். 

• தண்ணீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். 

• கல்வியில் காமராசராக விளங்க வேண்டும். 

• நியாய விலைக் கடைகளில் முறையான வர்த்தகம் நடைபெற வேண்டும். 

• எரிபொருட்கள் விலையைப் போல ஒரே விலை ஒரு நாளைக்கு என எல்லா பொருள்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும். 

• விலையெல்லாம் பொருட்கள் தவிர்த்து வரி விதிப்பில் குறைவாக வசூலிக்க வேண்டும். 

• தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத்திறனை வெளிநாட்டினர் போல் மேம்படுத்த வேண்டும். 

• விவசாயத்திற்குத் தட்டுப்பாடில்லாமல் பாசனத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

• சிறுபான்மையினருக்கும், மகளிருக்கும் உரிய நலன்களைப் பெற்றுத்தர வேண்டும். 

• பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததே என்பதை மறத்தல் கூடாது.



இயல் 7

துணைப்பாடம்

சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

- ஐராவதம் மகாதேவன்


பாடநூல் வினாக்கள்


நெடுவினா 


1. சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக. 

முன்னுரை :

இலக்கியங்கள் அவை உருவான காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள். 

இப்பகுதியில் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ளலாம். 

எழுத்து வடிவம் :

கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் சங்ககால எழுத்து வடிவமான ‘தமிழ்’ பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. 

புகளூர் கல்வெட்டு :

சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான்குன்றின் மீதுள்ள குகைகளில் காணமுடிகிறது. 

ஆறுநாட்டான் குன்று :

ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்: 

'யாற்றூர் செங்காயபன் உறைய 

கோ ஆதன் செல்லிரும் பொறை 

மகன் பெருங்கடுங்கோ மகன் 

இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்'

என்று பொறிக்கப்பட்டுள்ளன. 'கோ அதல் ‘செல் இரும்பொறை' என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்பகுதிகள் ‘செல்வக் கடுங்கோ வாழி அதன்' என்றும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதைக் காணமுடிகிறது. இவர் மகன் பெயர் ‘பெருங்கடுங்கோ' பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன் ‘இளங்கடுங்கோ' என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத்துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையில் உள்ளது. ‘பிட்டன்' ‘கொற்றன்' என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன. 

கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:

சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய ‘பெருங்கடுங்கோ'. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் ‘நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்' (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறியமுடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6.7.8 வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு மூலம் அறியமுடிகிறது. 

முடிவுரை : 

புகளூர் கல்வெட்டு மூலம் சேரமன்னர்களின் வாழ்க்கை, பாலை, மருதம் பாடியவர்கள், பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.


கற்பவை கற்றபின்


உங்கள் பகுதியில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக. 

ஆசிரியர் : இன்று நான் கல்வெட்டுகள் பற்றி உங்களுக்குக் கூறப்போகிறேன். 

மாணவர்கள் : எந்தக் கல்வெட்டுகள் பற்றி கூறப்போகிறீர்கள் ஐயா? 

ஆசிரியர் : கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூரில் சந்திரசவுடேஸ்வரர் கோயில் பற்றிகூற இருக்கிறேன். 

மாணவர்கள் : அக்கோவிலில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன ஐயா? 

ஆசிரியர் : அக்கோவிலில் 26 கல்வெட்டுகள் உள்ளன.

மாணவர்கள் : மன்னர்கள் பற்றி ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றதா ஐயா? 

ஆசிரியர் : ஆமாம் மாணவர்களே! முதலாம் இராஜேந்திரனின் பெயர்க்குறிப்பு காணப்படுகிறது. 

மாணவர்கள் : அந்தக் கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டைச் சோர்ந்தவை ஐயா? 

ஆசிரியர் : காலம் 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது மாணவர்களே! 

மாணவர்கள் : அக்கல்வெட்டின் பற்றி வேறு ஏதேனும் செய்திகளைக் கூறமுடியுமா ஐயா? 

ஆசிரியர் : அக்கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி அழிவுப் பாதையில் செல்கிறது. 

மாணவர்கள் : நன்றி ஐயா!




இயல் 7

இலக்கணம்

தொன்மம்


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க.

அ) கர்ணன் தோற்றான் போ.

ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி

இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு 

ஈ) இந்தா போறான் தருமன் 

[விடை: ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி]


2. தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.

அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்

ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.

இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள். 

ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

[விடை:ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது]


3. ‘சாபவிமோசனம்’ ‘அகலிகை" சுவிதைகளில் தொன்மங்களாய் பயன்படுத்தியவர்

அ) கு. அழகிரிசாமி

ஆ) புதுமைப்பித்தன் 

இ) ஜெயமோகன்

ஈ) எஸ்.இராமகிருஷ்ணன்

[விடை: ஆ) புதுமைப்பித்தன்]


4. பண்புக்குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக.

அ) அறம் - 1. கர்ணன்

ஆ) வலிமை - 2. மனுநீதிச்சோழன்

இ) நீதி - 3.பீமன்

ஈ) வள்ளல் - 4. தருமன்

அ) 3, 2, 1, 4

ஆ) 4, 3, 2, 1

இ) 2, 4, 3, 1

ஈ) 4, 3, 1, 2

[விடை: ஆ) 4, 3, 2, 1]


குறுவினா


5. தொன்மம் விளக்குக.

• சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.

• உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.

• அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது. 

• சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.


6. பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக. 

• நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன. 

• “கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான்" – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.

• 'மனுநீதிச் சோழன்' - தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.


7. உள்மனம் ஒரு பாற்கடல் 

அதைக் கடைந்தால்

அமுதம் மட்டுமல்ல 

ஆலகாலமும் வெளிப்படும் என்பதை

நீ அறிவாய் அல்லவா? - இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?

• தொன்மங்கள் முரண்பட்டவை.

• ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன. 

• இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.


கற்பவை கற்றபின்


தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக. 

• தாண்டிக் கெட்டாள் சீதை

தாண்டாமல் கெட்டாள் கண்ணகி.

• இரண்டு அடியாவது வாங்கினால்தான் திருந்துவாய்......

வள்ளுவர் வாக்கு 


நம்மை அளப்போம்

பலவுள் தெரிக.

1) 'பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்'-விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

அ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர் 

ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார் 

இ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்

ஈ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்


2) அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது 

அ) கடந்தகாலத் துயரங்ளை

ஆ) ஆட்களற்ற பொழுதை 

இ) பச்சையம் இழந்த நிலத்தை 

ஈ) அனைத்தையும்


3) முச்சந்தி இலக்கியம் என்பது

கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது 

கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது 

அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு 

ஆ) கூற்று 1, 2 சரி 

இ) கூற்று 1, 2 தவறு

ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி 


4) உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் பெயரெச்சம் 

அ) உண்டு 

ஆ) பிறந்து 

இ) வளர்ந்த

ஈ) இடந்தனில்


5) யானை புக்க புலம்போல - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்

அ) தனக்குப் பயன்படும் , பிறருக்குப் பயன்படாது 

ஆ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது 

இ) பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது 

ஈ) தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்


குறுவினா 


1) பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக. 

2) எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக. 

3) அறிவுடை வேந்தனின்நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை? 

4) செவியறிவுறூஉ துறையை விளக்குக. 


சிறுவினா 


1) வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக. 

2) அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக, தமிழ்நதி கூறுகிறார்? 

3) எங்கிருந்தோ வருகிறது வண்ணத்துப்பூச்சியொன்று பறவைகளும் வரக் கூடும் நாளை - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக. 

4) யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.



நெடுவினா 


1) எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன - நிறுவுக. 

2) சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? - விளக்குக. 

3) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


இவரின் தந்தை அரசுப் பணியாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம்வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?' என்று முடிவெடுத்து ஒரு மையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். 'நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா கொடுப்பார்' என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை .

தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு ழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா.இராமாணிக்கனார்.

ஆய்வு நெறி முறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்ககாலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் 'மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்' என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே. சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். 2006 – 2007 ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று: “அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கம் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்.” (மா.இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து) 

வினாக்கள் 

1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மை பற்றிக் கூறுக.

2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன? 

3. பிரித்தறிக: பேருதவி 

4. உறுப்பிலக்கணம் தருக : இழந்து 

5. இலக்கணக் குறிப்பு வரைக: காய்தல் 


விடைகள் 

1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்றவை. 

2. 2006 - 2007 ஆம் ஆண்டு. 

3. பேருதவி - பெருமை + உதவி.

4. இழந்து - இழ + த் (ந்) + த் + உ 

இழ - பகுதி

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி 

5. காய்தல் - தொழிற்பெயர்


தமிழாக்கம் தருக.

A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the airhostess.

"Madam, what is the matter?'' the hostess asked. 

"You placed me next to a black man. Give me an alternative seat”.

The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later: "Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.

Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”.

She turned to the black guy and said, “Sir, a seat awaits you in the first class”.

At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. 

Take a lesson from the sun who shines his light on everyone. 

Or the rain that falls on every single shore. 

No distinction of our race or the colour of our face. 

Nature's gifts are there for all men rich or poor.

(Courtesy: S.S.S. Bal Vikas)

தமிழாக்கம்:

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சற்று தூரம் சென்ற பணிப்பெண் ஒருசில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.

“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்தக் கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல் வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவருக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளை வழங்கும் போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா? 


கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.


புத்தகக் கண்காட்சி

- நமது சிறப்பு நிருபர் –

42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000. வாசகர்கள். 30,00,000, பார்வையாளர்கள் பங்குபெறும் அறிவித்திழவிழா. நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்...!!

விழா ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்.


மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

ஆற அமர : ஒரு பிரச்சினையில் தெளிவான நல்ல முடிவெடுக்க வேண்டுமென்றால் முதலில் உணர்ச்சிவசப்படாமல் 'ஆர அமர' யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

ஆணி அடித்தாற் போல : எங்கள் தமிழாசிரியை நடத்திய குறியீட்டு இலக்கணம் என் மனதில் ‘ஆணி அடித்தாற் போல' பதிந்தது. 

அகலக்கால் : பின்வரும் விளைவுகளை யோசிக்காமல் 'அகலக்கால்' வைத்தால் துன்பம் நேரிடும். 

வழிவழியாக : சோழமன்னர்களின் ஆட்சி வழிவழியாக அவருடைய வாரிசுகளே ஆண்டு வந்துள்ளனர். 

கண் துடைப்பு : எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும்போதெல்லாம் தம்பியை அரவணைத்தும், என்னை அடித்தும் ஒரு கண்துடைப்பு நடத்துவார். 


உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 

நற்றாள் தொழாஅர் எனின்.”

இறைவனுக்கு வணங்காத தலையும், ஆசிரியரை வணங்காத கையும் இருந்ததென்ன பயன். அதுபோல உலக மக்கள் உய்ய வள்ளுவன் போல ஆசிரியராக விளங்கிட வேண்டும். 

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா, 

மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”,

என்று பாப்பா பாட்டின் மூலம் படிப்பினைப் பதிப்பித்த பாரதி போல் ஆசானாக வேண்டும். 

“இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி 

இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே”,

என்று சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய புரட்சிக் கவி போல ஆசானாக மிளிர வேண்டும். 

“பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும் கற்பு” 

என்று அறிவுறுத்திய பெரியரைப் போல சமூக நீதி கற்பிக்கும் ஆசானாக வேண்டும். 

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்"

என்று முழங்கிய பேரறிஞர் போல் ஆசானாக வேண்டும். 

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?

அவன் தேடிய செல்வம் வேறு இடத்தினில் சேர்வதினால் வரும் தொல்லையடி”

என்று பாமர மக்களுக்குப் பாடம் புகட்டிய பட்டுக்கோட்டையார் போல் ஆசானாக வேண்டும். 

“உங்கள் வாழ்க்கையின் கடைசித் தருணம் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டதற்கு நான் மாணவர் மத்தியில் பாடம் நடத்திக் கொண்டிக்கும் போது அத்தருணம் வாய்க்க வேண்டும்” என்றாராம் கலாம்.

அவர்க்கு மட்டுமே அத்தருணம் வாய்த்தது. அத்தகைய ஆசான் போல் ஆக வேண்டும். மானுடன் வாழ நல்ல போதனைகளைத் தந்திட்ட இச்சான்றோர்களே என் கன(வு)வின் ஆசிரிய பிரம்மாக்கள் ஆவர்.


இலக்கிய நயம் பாராட்டுக.

பூமிச்சருகாம் பாலையை

முத்துபூத்த கடல்களாக்குவேன் 

புயலைக் கூறுபடுத்தியே - கோடிப்

புதிய தென்றலாக்குவேன் 

இரவில் விண்மீன் காசினை - செலுத்தி

இரவலரோடு பேசுவேன்! 

இரவெரிக்கும் பரிதியை - ஏழை விறகெரிக்க வீசுவேன் 

- நா. காமராசன் 

ஆசிரியர் குறிப்பு :

பெயர் : நா. காமராசன். 

பிறப்பு : 1942 - தேனி மாவட்டம், போ. மீனாட்சிபுரம். 

இறப்பு : மே 24. 2017, சென்னை. 

பணி : கவிஞர், பாடலாசிரியர். 

சிறப்பு : புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர், பேராசிரியர்,

மொழிபெயர்ப்புத் துறை.

திரண்டக் கருத்து :

பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவரோடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறகெரிக்கப் பயன்படுத்துவேன். 

மோனை நயம் :

காட்டுக்கு யானை 

பாட்டுக்கு மோனை

முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை 

சான்று:

பூமிச்சருகாம் புயலை புதிய 

ரவில் ரவலரோடு ரவெரிக்கும் 

எதுகை நயம்: 

மதுரைக்கு வைகை 

செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. 

சான்று:

வில் 

வலரோடு 

வெரிக்கும்

இயைபு :

இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.

சான்று:

கடல்களாக்குவேன் 

தென்றலாக்குவேன் 

பேசுவேன்

வீசுவேன் 

கற்பனை நயம் :

கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனையை விற்பனை செய்யாமல் தம் கவிதையிலேயே பயன்படுத்தியுள்ளார்.

புயலைக் கூறுபடுத்தியே - கோடி 

புதிய தென்றலாக்கு வேன். 

அணி நயம் : 

குளத்துக்குத் தாமரை அழகு 

கண்ணுக்கு மை அழகு 

செய்யுளுக்கு அணி அழகு

அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது. 


தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன. 

2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.

முருகன் சோறு உண்டு பால் பருகினான். 

3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். 

கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான். 

4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.

வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன். 

5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.

ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன. 

6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர். 


பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறத்தக்குறிகளை இட்டு எழுதுக.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார். 

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.


கீழ்க்காணும் விண்ணப்பத்தை நிரப்புக.




மொழியோடு விளையாடு


படித்துப் பார்த்துப் படைக்க:

மென்பறவைக் கூடு மின்றி

தின்பதற்குத் தீனியின்றி

தன் சிறிய குஞ்சுகளை

பொன் சிறகில் மூடி நின்று

நிற்கதியாம் நிலைதனிலே

நிற்க ஒரு நிழல் தேடி

பற்பலவாய் எண்ணமிட்டு

பக்கம் ஒரு மரம் கண்டு

தருவின் நிழல் கண்டு

தானியத்தின் மணி கண்டு

அருகில் தன் குஞ்சுகளை 

அணைத்தங்கு சென்றதுவே 

நெருங்கி வந்து பார்க்கையிலே

நிழலில்லை மணியில்லை

நெருஞ்சி முள்ளை நெல்மணியாய் 

நினைத்து விட்ட பரிதாபம்

பச்சையற்ற மரத்தருகே

படர்வதுண்டோ நிழலதுவும்

பசையற்ற நெஞ்சினுள்ளே

பாசமெனும் நிழலுண்டோ? 

- பூரணி 

படித்துப் பார்த்துப் படைத்தது 

உடலைக் கூடாக்கி 

உள்ளத்தைக் கல்லாக்கி 

உண்பதற்கு உணவின்றி 

தன் சந்ததியை 

தானே இறகில் சுமந்து

அமர இடமில்லாமல் அலைகிறது. 


தான் நொந்து

தன் பிள்ளையைக் கண்டு 

மனம் நொந்து

மரம்தரும் கனியைத் 

தேடி அலைகிறது. 


மரங்கண்டு மனமகிழ்ந்து 

சென்றால் மரம் 

கானல் நீர்போல் 

காட்சியளிக்கிறது. 

நெருஞ்சி முட்கள் 

பச்சையற்ற மரத்தினருகே 

இச்சையற்று இனிமேல் 

உயிர்வாழ்வேன் என மாய்ந்தது. 



எண்ணங்களை எழுத்தாக்குக.


பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள் 

வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகளல்ல நாங்கள் 

பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள் 

விண்ணில் பயணம் செய்திடுவோம் 

விந்தைகள் பல புரிந்திடுவோம் 

ஆடல் மட்டும் ஆடும் பெண்களல்ல 

விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்கனைகள் 

கணிதம் அறியா மக்குகளல்ல நாங்கள் 

கணினியிலும் விற்பன்னர்கள் நாங்கள் 

நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் - நாங்கள் 

வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கும் வலம் வரும் 

காவல் தெய்வங்கள் நாங்கள் 

விமானிகளாகி விண்ணகத்தில் உலா வருவோம் 

ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம் 

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல 

தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம் 

மாதராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் 

என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.


செய்து கற்போம்:

உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்க. 

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா 

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா 

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா 

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா 


இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா 

பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா 

பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா 

காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா 

பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா


நிற்க அதற்குத் தக


பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கம் பராமரிக்கம் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

(நம்முடைய வீட்டின் மீது நமக்கு இருக்கும் பொறுப்பினைப் போலவே பொதுச்சொத்துக்களின் மீதும் நமக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. எவையெல்லாம் பொதுச்சொத்துகள் எனப் பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறுக. 

பொதுச் சொத்துகள்  - அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் 

அரசுப் பேருந்து :  • அமரும் இருக்கையை இழுத்தல் கூடாது.

• கண்ணாடி ஜன்னலை மெதுவாக ஏற்றி இறக்கவும்.

• தின்பண்டம் தின்று விட்டு உதிரிகளைக் கீழே போடக் கூடாது. 

வழிபாட்டுத்தலங்கள் : • கை, கால் சுத்தம் செய்த பின்னர் ஆலயத்திற்குள் நுழைதல்.

• விபூதி, குங்குமம் சுவர்களில் தடவக்கூடாது. 

• விளக்கு வழிபாடு, உரிய இடத்தில் விளக்கேற்றவும்.

• காகிதம், இலை, பழத்தோல் வளாகத்தில் போடக்கூடாது. 

பள்ளிக்கூடங்கள் : • வகுப்பறையில் காகிதங்கள் கிழித்துப் போடக் கூடாது.

• வகுப்பறையின் உள்ளே உணவு அருந்தக் கூடாது. 

• மேசைகள் மீதும், சுவர்களின் மீதும் கிறுக்க, எழுதக் கூடாது.

• கழிவறைகளிலும் தூய்மை பேண வேண்டும். 

மருத்துவமனைகள் : • பரிசோதனைக்காக வரிசையில் நிற்க வேண்டும்.

• பரிசோதனை, சிகிச்சையின் போது பேசுவதைத் தவிர்க்கவும். 

• மருத்துவமனை உள்ளே எச்சில் மற்றும் அசுத்தம் செய்யக் கூடாது.

• பார்வையாளராகச் சென்று நோயாளி யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. 


படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)

Debit Card - பற்று அட்டை

Demand Draft - கேட்பு வரைவோலை 

Withdrawal Slip - திரும்பப் பெறல் படிவம் 

Teller - விரைவுக் காசாளர் 

Mobile Banking - அலைபேசி வழி வங்கி முறை

Internet Banking - இணையவங்கி முறை


அறிவை விரிவு செய்

• தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் - செந்தீ நடராசன்

• முச்சந்தி இலக்கியம் - ஆ.இரா. வேங்கடாசலபதி 

• கல்வெட்டு - (இதழ்)

• கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் - குடவாயில் பாலசுப்ரமணியன் 

• நீர்க்குமிழி - கே.பாலசந்தர் 

• வெள்ளை இருட்டு - இன்குலாப்

• முள்ளும் மலரும் - உமா சந்திரன்

Tags : Chapter 7 | 12th Tamil இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal : Questions and Answers Chapter 7 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்